கோவில்பட்டியில் தொடர் குற்றச்சாட்டுகள்: காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்


ஆய்வாளர் கிங்ஸ்லி தேவானந்த்.

கோவில்பட்டி: கோவில்பட்டியில் தொடர் புகார்கள் மற்றும் பணியை சரிவர செய்யாத மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவானந்த் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளராக கிங்ஸ்லி தேவானந்த் கடந்த ஓராண்டு மேலாக பணியாற்றி வந்தார். இவர் மீது பொதுமக்களிடமிருந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு வந்தன. மேலும், கோவில்பட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துச்சாமி என்பவர் தனது கட்சிக்காரருக்காக அழைப்பின் பேரில் மேற்கு காவல் நிலையத்துக்கு சென்றிருந்தபோது, அங்கு பணியில் இருந்த பெண் காவல் உதவி ஆய்வாளர், அவரை அவதூறாகப் பேசியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மேற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்காததால், வழக்கறிஞர் முத்துச்சாமி நீதிமன்றத்தை நாடினார். வழக்கை விசாரித்தை நீதிமன்றம் பெண் உதவி ஆய்வாளர் மீது வழக்குப் பதிவு செய்து மாவட்ட காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஆய்வாளர் கிங்ஸ்லி தேவானந்த் வழக்குப்பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். நீதிமன்ற உத்தரவின்படி செயல்படாத ஆய்வாளர் கிங்ஸ்லி தேவானந்த் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வழக்கறிஞர் முத்துச்சாமி, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியரிடம் மனு வழங்கி இருந்தார்.

இந்நிலையில், கடந்த 23-ம் தேதி ரேஷன் அரிசி கடத்தல் பிரச்சினையில் மாரிச்செல்வம் என்பவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக மேற்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 10 பேர் கைது செய்யப்பட்டு, அதில் 8 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த பாம்பு கார்த்திக்கை சுமார் 45 நாட்களுக்கு பின்னர் தனிப்படை போலீஸார் சென்னையில் கைது செய்தனர். பின்னர் அவரை வல்லநாடு துப்பாக்கி சூடு தளத்துக்கு கொண்டுசென்று போலீஸார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே, அவரது தாய், தனது மகன் உயிருக்கு ஆபத்து என கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

சென்னையில் கைது செய்யப்பட்ட பாம்பு கார்த்திக்கை தூத்துக்குடி கொண்டு வருவது, ரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில், எப்படி அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்தது என உயர் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், மேற்கு காவல் நிலையத்தில் உள்ள போலீஸார் செல்போன் உரையாடல் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், 2 காவலர்களின் எண்களில் இருந்து பாம்பு கார்த்திக்கின் உறவினர்களிடம் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, காவலர்கள் ஜெய்கணேஷ், ராம்சுந்தர் ஆகயோர் ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் உத்தரவிட்டார். இந்த விவகாரத்தில் ஆய்வாளர் கிங்ஸ்லி தேவானந்துக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இதுகுறித்து நெல்லை சரக டிஐஜி (பொறுப்பு) ரம்யா பாரதி, காவல் ஆய்வாளர் கிங்ஸ்லி தேவானந்த்தை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட உயரதிகாரிகளிடம் விசாரித்தபோது, காவல்துறை பணிகளை சரிவர மேற்கொள்ளாததாலும், தொடர் குற்றச்சாட்டு காரணமாகவும் ஆய்வாளர் கிங்ஸ்லி தேவானந்த் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது, என்றனர். ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.