கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை ஜூலை மாதம் தொடங்க தமிழக அரசு முடிவு


பிரதிநிதித்துவப் படம்

சென்னை: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளிகள் தேர்வை வரும் 25-ம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், ஜூலை மாதம் திட்டத்தை தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கலின்போது`கலைஞரின் கனவு இல்லம்' திட்டம் தொடர்பான அறிவிப்பைஅமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார். தமிழகத்தில் குடிசை வீடுகளில் குடியிருப்போருக்கு, புதிதாக ஆர்.சி.சி. கூரையுடன் கூடிய வீடுகளை கட்டித் தருவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

கடந்த மார்ச் மாதம் இந்த திட்டத்துக்கான அரசாணையை ஊரக வளர்ச்சித் துறை வெளியிட்டது. கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.3,100 கோடியில், ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கான வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் பி.பொன்னையா அறிவுறுத்தி இருந்தார்.

ரூ.3,100 கோடி நிதி ஒதுக்கீடு: இந்த திட்டத்தில், 2024-25-ம்நிதியாண்டில் ஒரு வீட்டுக்கு ரூ.3.10 லட்சம் வீதம், ஒரு லட்சம் வீடுகள் கட்ட ரூ.3,100 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. வீடுகள் அனைத்தும் 360 சதுரஅடி பரப்பில், சமையல் அறையுடன் இருக்க வேண்டும். இதில் 300 சதுரஅடி ஆர்சிசி கூரையுடனும், மீதமுள்ள 60சதுரஅடி தீப்பிடிக்காத பொருளில் அமைக்கப்பட்ட கூரையாக, பயனாளிகளின் விருப்பத்துக்கு ஏற்ப அமைக்கப்பட வேண்டும். ஓலை அல்லது ஆஸ்பெஸ்டாஸ் கூரை அமைக்கக் கூடாது.

குடிசையில் வாழ்பவர்கள், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் மறுசர்வே பட்டியலில் உள்ளவர்கள், `அனைவருக்கும் வீடு' சர்வே பட்டியலில் உள்ள குடிசை வீட்டுப் பயனாளிகள் ஆகியோர் தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த விவரங்களை வரும் 31-ம்தேதிக்குள் ஊரக வளர்ச்சித் துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த திட்டத்தை ஜூலை மாதம் தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பயனாளிகளைத் தேர்வு செய்யும் பணியை வரும் 25-ம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஜூலை 5-ம் தேதிக்குள் பணியாணை வழங்கி, ஜூலை10-ம் தேதிக்குள் வீடு கட்டும் பணிகளைத் தொடங்க நடவடிக்கைஎடுக்க்மாறும் அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.

ஊரகப் பகுதிகளில் 5 ஆயிரத்திற்கு குறைவாக குடிசைகள் உள்ள 15 மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து, வீடு கட்டும் ஆணைகளை வழங்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது