அமைச்சர் கே.என்.நேருவின் முகநூல் பதிவில் லால்குடி திமுக எம்எல்ஏவின் ‘அதிர்ச்சி’ கமென்ட்


திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.

இது தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு தனது முகநூல் பக்கத்தில், ‘லால்குடியில் புதிய வட்டாட்சியர் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் கட்டுவதற்கான இடங்களை ஆய்வு செய்தேன். இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் மற்றும்அரசு அலுவலர்கள், மண்டலத் தலைவர், மாமன்ற உறுப்பினர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்’ என்றுபதிவிட்டு, அந்த நிகழ்வு தொடர்பான புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார்.

அமைச்சரின் இந்த பதிவுக்கான கமென்ட் பகுதியில், தற்போது லால்குடி தொகுதி திமுகஎம்எல்ஏவாக இருக்கும் அ.சவுந்தரபாண்டியன், ‘‘லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சவுந்தரபாண்டியன் இயற்கை எய்திவிட்டதால், லால்குடி தொகுதி காலியான இடமாக அறிவிக்கப்பட்டது’’ என்று பதிவிட்டிருந்தார். அவரது இந்தப் பகுதி திமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக எம்எல்ஏ சவுந்தரபாண்டியனிடம் கேட்டபோது, "கடந்த சில மாதங்களாகவே அதிகாரிகள் என்னை தொடர்ந்து புறக்கணிக்கின்றனர். எனது தொகுதியில் ஆய்வுப் பணிக்குஅமைச்சர் வருவது தொடர்பாக எனக்கு எந்த தகவலையும் அதிகாரிகளோ, அமைச்சர் தரப்பில்இருந்தோ தெரிவிக்கப்படவில்லை.

இது மிகுந்த மனவலியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து இதுபோன்று நடைபெற்றதால்தான், நான் அவ்வாறு பதிவிட்டேன்" என்றார்.

இதற்கிடையில், எம்எல்ஏ சவுந்தரபாண்டியனின் பதிவு, தற்போது முகநூல் பக்கத்தில் நீக்கப்பட்டுள்ளது. இவர் லால்குடி தொகுதியில் தொடர்ந்து 4-வது முறையாக எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.