25 ஆண்டு பணி முடித்தும் சிறப்பு எஸ்.ஐ. பதவி உயர்வு கிடைக்காமல் தவிக்கும் போலீஸார் @ விருதுநகர்


விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 25 ஆண்டுகள் பணி முடிந்தும் சிறப்பு எஸ்.ஐ. பதவி உயர்வு கிடைக்காமல் போலீஸார் தவித்து வருகின்றனர்.

தமிழக காவல் துறையில் 25 ஆண்டுகள் பணியாற்றிய போலீஸாருக்கு சிறப்பு எஸ்.ஐ. ஆக பதவி உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது. காவலராக பணியில் சேர்ந்து 25 ஆண்டுகள் தொடர்ந்து சேவையாற்றும் போலீஸார் காவலராகவே பணி ஓய்வு பெறுவதால், அவர்களை கௌரவிக்கும் வகையில் 25 ஆண்டுகள் முடித்த போலீஸாருக்கு சிறப்பு எஸ்.ஐ. பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இது காவலராக இருக்கும் போலீஸாரை அடுத்த நிலை அதிகாரியாக மாற்றுகிறது. கடந்த மாதம் 25 ஆண்டுகள் பணி முடித்த போலீஸாருக்கு சில மாவட்டங்களில் சிறப்பு எஸ்.ஐ. ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 42 ஏட்டுகளுக்கு சிறப்பு எஸ்.ஐ. பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதேபோன்று, விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 25 ஆண்டுகள் பணி முடித்த போலீஸாருக்கு சிறப்பு எஸ்.ஐ. பதவி உயர்வு வழங்கப்பட்டது. ஆனால், விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 25 ஆண்டுகள் பணி முடித்த போஸீஸார் சுமார் 60 பேர் சிறப்பு எஸ்.ஐ. பதவி உயர்வுக்காக காத்திருக்கின்றனர்.

இது குறித்து அந்தப் போலீஸார் கூறுகையில், “தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் 25 ஆண்டுகள் பணி முடித்த போலீஸாருக்கு சிறப்பு எஸ்.ஐ. ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதைப் போன்று விருதுநகர் மாவட்டத்திலும் 25 ஆண்டுகள் பணி முடிந்த போலீஸாருக்கு சிறப்பு எஸ்.ஐ. பதவி உயர்வை கால தாமதமின்றி அளிக்க மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.