பாஜகவுடன் கூட்டணி வைக்காததால்தான் அதிமுக தோல்வியை தழுவியது: மதுரை ஆதீனம் கருத்து


மதுரை: பாஜகவுடன் கூட்டணி வைக்காததால்தான் அதிமுக தோல்வியை தழுவியதாக மதுரை ஆதீனம் ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிகபரமாச்சாரியர் கருத்து தெரிவித்துள்ளார்.

மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் ஆதீனம் அளித்த பேட்டியில் கூறியதாவது: இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவிக்க காரணமானவர்களும் வெற்றிபெற்று விட்டார்களே என வேதனையாக உள்ளது. இக்காரணத்தால்தான் காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆள முடியவில்லை.

பிரதமர் மோடிக்கு 2 கோரிக்கைகளை முன்வைக்கிறேன். கச்சத்தீவை மீட்டு தமிழகத்தோடு இணைக்க வேண்டும். இலங்கையில் உள்ள தமிழ் மக்களை பாதுகாக்க தமிழ் ஈழத்தை உருவாக்க வேண்டும்.

இலங்கைத் தமிழர் மற்றும் கச்சத்தீவு விவகாரம் ஆகியவற்றுக்காக பிரதமரை நான் ஆதரிக்கிறேன். சீமான் என்னை சந்தித்தபோது பிரதமரிடம் இலங்கையில் தமிழ் ஈழம் அமைக்க கோரிக்கை வைக்கும்படி கேட்டுக் கொண்டார்.

இலங்கை தமிழர்களுக்காக தனிநாடு அமைக்க வேண்டுமென பிரதமரை சந்தித்து விரைவில் கோரிக்கை வைப்பேன். பாஜக குறைந்த தொகுதிகளில் வெற்றிபெற்றதால் எதிர்க் கட்சிகள் மோடியை விமர்சனம் செய்கின்றன.

இதுவே பாஜக பெரும்பான்மை பெற்றிருந்தால், வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு வாக்கு விழுகிறது என புகார் தெரிவிப்பார்கள்.

ஜனநாயக நாட்டில் வெற்றி, தோல்வி மக்கள் அளிக்கும் தீர்ப்பு. பெரும்பான்மை பாஜகவுக்கு கிடைக்காததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர் எனக்கூற முடியாது. 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்களே 99 தொகுதிகளில் தான் வெல்ல முடிந்தது.

அதிமுக தோல்வி ஏன்?- பாஜகவுடன் கூட்டணி வைக்காததால்தான் அதிமுக தோல்வியை தழுவியுள்ளது. அதிமுக தனது கட்டமைப்புகளை தொடர்ந்து மேம்படுத்தவில்லை. கடந்த தேர்தலில் பாஜக, நாம் தமிழர் ஆகியகட்சிகள் மாநிலத்தில் கட்டமைப்புகளை உருவாக்கி உள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

x