கட்சி ஒன்றிணையாவிட்டால் அதிமுக எந்த காலத்திலும் வெற்றிபெற முடியாது: ஓபிஎஸ் கருத்து


சென்னை: பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லி சென்று இருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் அவர் கூறியதாவது:

மக்களவை தேர்தலில் அதிமுக 7 இடங்களில் டெபாசிட் இழந்தது, 9 இடங்களில் 3-ம் இடத்துக்கு சென்றது தொடர்பாக, அதிமுகவின் தற்காலிக பொறுப்பு ஏற்றிருக்கும் தலைமையிடம்தான் கேட்க வேண்டும்.

தமிழகத்தில் பாஜக அதிக வாக்குகள் பெற்று வளர்ச்சி பெற்றிருப்பதற்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முழு வீச்சாக களத்தில் இறங்கி, 24 மணி நேரமும் பாஜக வெற்றிக்காக அரும்பாடுபட்டதே காரணம்.

தமிழகத்தில் 60 சதவீத மக்கள் தான் அரசியல் இயக்கங்களில் உள்ளனர். பொதுமக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதன் அடிப்படையில் தான் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது. அதிமுகவின் பிரிந்திருக்கும் சக்திகள் ஒன்றிணையவில்லை என்றால் எந்த காலத்திலும் வெற்றிபெற முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.