தமிழகம், புதுச்சேரியில் ஜூன் 16 வரை மழை


படம்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஜூன் 12 (நாளை) முதல் 16-ம் தேதிவரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் சில இடங்களில் 14-ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை படிப்படியாக உயரக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூர், தேவாலாவில் 8 செ.மீ.,கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 7 செ.மீ., கோவை மாவட்டம் சோலையார், நீலகிரி மாவட்டம் கூடலூர் சந்தை, மேல் கூடலூர், கோவை மாவட்டம் வால்பாறையில் 4 செ.மீ., நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, செருமுள்ளி, வூட் பிரையர்எஸ்டேட், கோவை மாவட்டம் சின்கோனாவில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இன்று (ஜூன் 11) முதல் 14-ம் தேதி வரை தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர் கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

x