விருதுநகர்: சாலையை சீரமைக்கக் கோரி நகராட்சி அலுவலகம் முன் பெண் கவுன்சிலர் தர்ணா


விருதுநகர்: விருதுநகரில் நகராட்சி அலுவலகம் முன் சாலையில் அமர்ந்து பெண் கவுன்சிலர் ஒருவர் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட 13வது வார்டு பகுதியில் அல்லி தெரு உள்ளது. இத்தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ரயில்வே பீடர் சாலை- அல்லி தெரு சந்திப்பு பகுதியில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது. இப்பணிகள் முழுவதுமாக முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. அதோடு, அப்பகுதியிலே தோண்டப்பட்ட குழியும் சரியாக மூடப்படாமல் பள்ளமாக இருந்து வந்தது. அண்மையில் பெய்த தொடர் மழையால் அப்பகுதி சேறும் சகதியுமானது.

இது குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்ததையடுத்து பள்ளம் இருந்த இடத்தில் சிமெண்ட் சிலாப்புகளால் தற்காலிகமாக மூடப்பட்டது. ஆனாலும், பள்ளம் முழுவதுமாக மூடப்படாமலும், குடிநீர்த் திட்டப் பணிகள் முழுவதுமாக முடிக்கப்படாமலும் உள்ளது. இதனால், இருசக்கர வாகனங்களில் செல்வோரும் நடந்து செல்லும் பொதுமக்களும் மிகவும் சிரமப் பட்டு வருகின்றன. தெரு நுழைவில் பள்ளம் உள்ள காரணத்தால் தெருவுக்குள் இருக்கும் ரேசன் கடைக்கு லாரிகள் மூலம் பொருள்கள் கொண்டுசெல்ல முடியவில்லை.

இதனால், 3 மாதங்களுக்கு மேலாக அல்லி தெருவில் உள்ள ரேசன் கடையில் பொருள்கள் விநியோகம் செய்யப்படாமல் பூட்டப்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து நகராட்சியில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்ல. இதனால் ஆத்திரமடைந்த 13-வது வார்டு சுயேட்சை பெண் கவுன்சிலர் முத்து லட்சுமி இன்று பிற்பகல், நகராட்சி அலுவலகம் முன் சாலையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதோடு, பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த நகராட்சி ஆணையர் லீனா சைமன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, ஒரு வாரத்தில் இக்குறைபாடுகள் சரி செய்யப்பட்டு சாலை அமைத்துக்கொடுக்கப்படும் என உறுதியளித்தார். அதையடுத்து, தர்ணா போராட்டத்தை கைவிட்டு கவுன்சிலர் முத்து லட்சுமி புறப்பட்டுச் சென்றார்.