சிறப்பு குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவிக்க டிடிவி தினகரன் வலியுறுத்தல்


சென்னை: அமமுக பொதுச்செயலாளர் தினகரன் வெளியிட்ட அறிக்கை: காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் ஒட்டுமொத்த பாசன ஆதாரமாக திகழும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிந்திருக்கும் நிலையில், நடப்பாண்டில் டெல்டா பகுதிகளில் மேற்கொள்ளப்படும் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பில்லாத சூழல் நிலவுகிறது.

காவிரி டெல்டா பாசன பகுதிகளில் கடந்த ஆண்டு நிலவிய தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டிலும் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படாது என்ற செய்தி டெல்டா விவசாயிகளின் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.

இயற்கை பேரிடர்கள், பொய்த்துப்போன பருவமழை, அதள பாதாளத்துக்கு சென்ற நிலத்தடி நீர் என சவால்கள் நிறைந்த சூழலிலும் விவசாயத்தை கைவிடாத விவசாயிகளுக்கு, விதை நெல், உரங்கள், இடுபொருட்கள், வேளாண் இயந்திரங்கள் ஆகியவற்றை மானியத்தில் வழங்கும் வகையில் சிறப்பு குறுவைத் தொகுப்பு திட்டத்தை அறிவித்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.

x