பாஜகவுடன் இனி ஒருபோதும் கூட்டணி கிடையாது: இபிஎஸ் திட்டவட்டம்


அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி

சேலம்: சசிகலா, ஓபிஎஸ் ஆகியோர் கட்சியில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். பாஜகவுடன் இனி ஒருபோதும் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மக்களவைத் தேர்தலின்போது பிரதமர் மோடி அதிக முறை தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். பாஜக தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரும் தங்களது கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினர். அதேபோல, ராமதாஸ், அன்புமணி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

ஆனால், அதிமுகவைப் பொறுத்தவரை நான் மட்டும்தான் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டேன். தேமுதிக பிரேமலதா மற்றும் கூட்டணிக் கட்சியினர் ஆங்காங்கே பிரச்சாரம் செய்தனர்.

பாஜக, இண்டியா கூட்டணிகளுக்கு பலம் அதிகம். அதிமுககூட்டணிக்கு பலம் இல்லைஎன்று செய்திகளைப் பரப்பினர். இதையெல்லாம் மீறி கடந்த மக்களவைத் தேர்தலைவிட ஒரு சதவீதம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளோம். இதுவே அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி.

பாஜக வளர்ந்து விட்டதாகவும், அதிக வாக்குகள் பெற்றதாகவும் கூறப்படுவது தவறான செய்தி. திமுகவின் வாக்கு சதவீதமும் குறைந்திருக்கிறது. அதிமுகதான் கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளது. சூழ்நிலைக்குத் தக்கவாறு தேர்தல் வெற்றி, தோல்வி அமையும்.

சசிகலா, ஓபிஎஸ் ஆகியோர் கட்சியில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். உண்மையில் இவர்கள் பிரிந்து சென்றதால்தான், அதிமுகவுக்கு சில இடங்களில் கூடுதல் வாக்குகள் கிடைத்துள்ளன. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் அதிமுக வெற்றி பெற்று, தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும்.

எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் தேசியக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்தோம். அவர்கள் வெற்றி பெறும்வரை எங்களைப் பயன்படுத்தி கொண்டனர். வெற்றி பெற்ற பின்னர், தமிழகத்தை மறந்துவிட்டனர். இந்நிலை மாற வேண்டும் என்பதால்தான் தனித்துப் போட்டியிட்டோம். தமிழக உரிமைகள் பறிபோவதை தடுக்கவும், சுதந்திரமாக செயல்படவும் அதிமுக இந்த முடிவை எடுத்தது.

தற்போது வெற்றி பெற்றுள்ளதிமுக கூட்டணி என்ன சாதிக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பது குறித்து சிந்திக்கவில்லை. இனிஒருபோதும் பாஜகவுடன் கூட்டணிஅமைக்க மாட்டோம். இதை ஏற்கெனவே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெளிவுபடுத்திவிட்டார். இவ்வாறு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.

x