பாரதத்தின் பாரம்பரிய கல்வி முறையை தமிழகத்தில் கொண்டுவர வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து


கோவை: கல்வி சீர்திருத்தம் செய்வதற்கு தடையாக உள்ள சிந்தனைகளை எதிர்கொண்டு, பாரதத்தின் பாரம்பரியக் கல்வி முறையை தமிழகத்தில் கொண்டுவர வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

கோவையில் 'புதிய பாரதத்தில் கல்வி சீர்திருத்தங்கள்' என்ற தலைப்பிலான 2 நாள் கருத்தரங்கை ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று தொடங்கிவைத்தார்.

தமிழக உயர்கல்வி ஆசிரியர் சங்கம், கேரள மாநில ஆசிரியர் சங்கம், டெல்லி அகில பாரதிய ராஷ்ட்ரிய சாக்ஷிக் மகாசங்க ஆசிரியர் அமைப்புகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கருத்தரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:

ஆங்கிலேயர் வருகைக்கு முன் பொருளாதாரத்தில் முதன்மை நாடாக பாரதம் இருந்தது. 1947-ல்நாடு சுதந்திரமடைந்தபோது, பொருளாதாரத்தில் 6-ம் இடத்தில் இருந்தோம். 2014 வரை 11-ம் இடத்தில்இருந்த நாம், கடந்த 10 ஆண்டுகளில் 5-ம் இடத்துக்கு முன்னேறி உள்ளோம். 2047-ல் உலகின் 3-வதுபொருளாதார சக்தியாக மாறுவோம்.

புதிய பாரதத்தைப் படைக்கும்வகையில் 2020-ல் தேசிய கல்விக்கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. பல்கலை. மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் ஆகியவை, இந்திய அறிவு சார் அமைப்பு என்பதை 'பாரதிய அறிவுசார் அமைப்பு' என்று பெயர் மாற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.

பாடத் திட்டங்களில் தேசியவிடுதலை இயக்கங்கள் தவிர்க்கப்பட்டு, மிகைப்படுத்தப்பட்ட ஆங்கிலேய காலனி ஆதிக்கம் குறித்தும், திராவிட இயக்கங்கள் குறித்தும் பாடங்கள் இடம்பெற்றுள்ளன.

சுதந்திரப் போராட்டத்தில் ரத்தம் சிந்தி உயிர்நீத்த வீரர்களின் தியாகங்கள் மறைக்கப்பட்டு வருகின்றன. வன்முறை சம்பவங்களை காரணம்காட்டி, சிவகங்கையில் மருது பாண்டியர் சகோதரர்கள் நினைவுதினம் அனுசரிக்கப்படாமல் இருப்பது ஏற்புடையதல்ல.கல்வி அமைப்பை சீர்திருத்தம் செய்வதற்கு தடையாக உள்ள சிந்தனைகளை எதிர்கொண்டு, பாரம்பரியமிக்க கல்வி முறையைக் கொண்டுவர வேண்டும். இவ்வாறு ஆளுநர் பேசினார்.

பல்கலை. மானியக் குழுவின் செயலாளர் மணீஷ் ஜோஷி பேசும்போது, ஐரோப்பா மற்றும் வடஅமெரிக்க நாடுகள், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இந்தியாவில் கல்வி நிறுவனங்களை அமைக்க ஆர்வம் காண்பித்து வருகின்றன. உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனங்கள், மாநிலங்களுக்குள் தங்களது நிறுவனங்களை அமைக்கவும் ஊக்குவித்து வருகிறோம் என்றார்.

கருத்தரங்கில், அகில பாரதிய ராஷ்ட்ரிய சாக்ஷிக் மகாசங்க ஆசிரியர் இணை அமைப்பு செயலாளர் குந்தா லட்சுமண், கொங்கு நாடுகலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலாளர் சி.ஏ.வாசுகி மற்றும் மத்திய, மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், ஐஐடி, மற்றும் ஐஐஎம்-களின் இயக்குநர்கள் பங்கேற்றனர்