20 நாட்களில் காலாவதியாக உள்ள மருந்து அரசு குழந்தைகள் மருத்துவமனையில் விநியோகம் @ புதுச்சேரி


புதுச்சேரி: புதுச்சேரியில் ராஜீவ்காந்தி குழந்தைகள் மருத்துவமனையில் 20 நாட்களில் காலாவதியாக உள்ள சளிக்கான பவுடர் வழங்கப்பட்டதாகவும், அவை கெட்டுபோன நிலையில் இருந்ததால் புகார் தந்தபோது அலட்சியமாக பதிலளித்ததால் தர்ணா நடந்தது. அதைத்தொடர்ந்து மருந்து விநியோகிக்காமல் இன்று நிறுத்தப்பட்டது.

புதுச்சேரியில் ராஜீவ்காந்தி பெண்கள் மற்றும் குழந்தைகள் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. புதுச்சேரி மட்டுமல்லாமல் தமிழகப் பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் இந்த மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறுகின்றனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் குழந்தைகள் சளிப்பாதிப்புக்காக இன்று வழங்கப்பட்ட வெள்ளைப் பவுடர் மருந்து தண்ணீரில் கலக்கியதும் மஞ்சள் நிறமாக மாறுவதாகப் புகார் எழுந்தது. அதை தனியார் மருந்துக் கடைகளில் காட்டியபோது, காலாவதியாகும் மாதத்தில் பவுடராக உள்ள மருந்துகள் கெட்டுவிட்டால், மஞ்சள் நிறத்தில் மாறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து புதுச்சேரி சிஐடியூ மாநிலத் தலைவர் பிரபுராஜ், செயலர் சீனுவாசன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சஞ்சய் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று உறைவிட மருத்துவர் உள்ளிட்டோரைச் சந்தித்தனர். அப்போது மருந்தக அலுவலர் அலட்சியமாக பதில் கூறியதாக சிஐடியூ தரப்பில் புகார் கூறப்பட்டு, தர்ணாவில் ஈடுபட்டனர். அதையடுத்து குழந்தைகள் நல மருத்துவர் அழைக்கப்பட்டு புகார் குறித்து விளக்கப்பட்டது.

குழந்தைகள் நல மருத்துவர், “குறிப்பிட்ட மருந்து பவுடர் ஜூன் மாதம் முடிய அதாவது 20 நாட்கள் வரை பயன்படுத்தலாம் என்றாலும், அவை தண்ணீரில் இட்டவுடன் மஞ்சளாக மாறுவது சரியல்ல. கெட்டுப்போன நிலையில் உள்ள அப்பவுடர் மருந்தை பயன்படுத்தக் கூடாது” என்றார். அதையடுத்து மருந்தை விநியோகிக்கக் கூடாது என மருத்துவ அலுவலர்கள் கூறியதால், சிஐடியூ அமைப்பினர் கலைந்து சென்றனர். இதுதொடர்பாக மருத்துவமனையில் புகார் மனுவும் தரப்பட்டது.