கட்டுமான பொருட்கள் வந்தும் 2 ஆண்டாக கட்டப்படாத கழிப்பறைகள்: காட்டேரிக்குப்பம் இருளர் குடியிருப்பு அவலம்


புதுச்சேரி: நூறு சதவீதம் கழிப்பறை வசதி கொண்ட மாநிலமாக விருது பெற்ற புதுச்சேரியில் காட்டேரிக்குப்பத்தில் இருளர் இன மக்கள் வசிக்கும் பகுதியில் இலவச கழிவறை கட்ட கட்டுமான பொருட்கள் வந்து இறங்கி இரண்டு ஆண்டுகளாகியும் அவை கட்டித்தரப்படாமல் உள்ளது. அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் அலட்சியப் போக்கு நிலவுவதால் இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் முறையிட உள்ளனர்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் இன்று காட்டேரிக்குப்பம் பகுதியில் கள ஆய்வுப் பணி நடந்தது. அப்போது, தங்குமிடம், சுகாதாரம், குடிநீர் வசதி என இருளர் மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்று கணக்கெடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலர் சரவணன், ''காட்டேரிக்குப்பத்தில் 50 ஆண்டு காலமாக வசித்து வரும் இருளர் மக்களுக்கு இன்றளவும் மனை பட்டா வழங்கப்படாமல் உள்ளது, மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குடும்பத்திற்கு ரூபாய் 20,000/- என கணக்கிடப்பட்டு அரசு சார்பில் இலவச கழிப்பறை கட்டுவதற்கான கட்டுமான பொருட்கள் அங்கு இறக்கி வைக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட கான்ட்ராக்டருக்கும் பணம் சென்று விட்டது. ஆனாலும் இன்னும் கழிப்பறைகள் கட்டப்படவில்லை. கட்டுமானப் பொருட்கள் பொது வெளியில் கிடப்பதால் அது சேதமடைந்து வருகிறது. எம்-சாண்ட் மண்கள் கரைந்துள்ளது. சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் இன்னமும் அலட்சியப் போக்குடன் இருக்கிறார்கள்.

புதுச்சேரி அரசு அண்மையில் 100 சதவீதம் கழிப்பறை வசதி உள்ள மாநிலமாக விருது பெற்றுள்ளது. இங்கு உள்ள குளம் தூர்வாரப்படாமல் துர்நாற்றம் வீசுகிறது. இப்பகுதி மக்கள் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு இருளர் இன மக்களுக்கு தேவையான கழைப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்'' என்றார்.