தஞ்சாவூர்: குடிநீர் வழங்காத மாநகராட்சியைக் கண்டித்து காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்


பொதுமக்கள் சாலை மறியல்

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாநகராட்சியின் 20-வது வார்டில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காத மாநகராட்சியைக் கண்டித்து இன்று (சனிக்கிழமை) காலிக் குடங்களுடன் மறியல் செய்ததால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

தஞ்சை மாநகராட்சியின் 20-வது வார்டுக்கு உட்பட்ட சேவப்பநாயக்கன்வாரி மேல்கரை, வடகரை, கிரி ரோடு, ராஜாஜி ரோடு, பிரதாபசிம்மபுரம், ராஜன் ரோடு ஆகிய பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மாநகராட்சி சார்பில் குழாய் மூலம் வீடுகளுக்கு தினமும் காலை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 1 வாரமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து 20-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரவணன் மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தார். ஆனாலும் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இன்று காலையும் குடிநீர் வராததால் ஆத்திரமடைந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன், மாமன்ற உறுப்பினர் சரவணன் ஆகியோர் தலைமையில் சீனிவாசபுரம் கிரி ரோட்டில் காலிக் குடங்களுடன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, குடிநீர் விநியோகம் செய்யப்படாத மாநகராட்சியைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தஞ்சை மேற்கு போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், “எங்கள் பகுதியில் வீடுகளுக்கு ஊதா கலர் குழாய் பொருத்திய பிறகு குடிநீர் விநியோகம் சீராக இல்லை.

சில நிமிடங்கள் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. தற்போது 1 வாரமாக சுத்தமாக தண்ணீர் வரவில்லை. எனவே எங்கள் பகுதிகளுக்கு ஊதா கலர் குழாயை நீக்கிவிட்டு பழைய முறையில் குழாய் பொருத்த வேண்டும். தினமும் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்” என்று தெரிவித்தனர்.

இதற்கு மாநகராட்சி அதிகாரிகள், “தற்போது லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கிறோம். அதைத் தொடர்ந்து பிரச்சினையை சரி செய்து சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கிறோம்” என்றனர். இதனை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.