தகவல் தராத துணை வட்டாட்சியர் ரூ.15,000 இழப்பீடாக வழங்க தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவு


கும்பகோணம்: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்காத கும்பகோணம் தலைமையிடத்துத் துணை வட்டாட்சியர் மனுதாரரருக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கும்பகோணம் பேட்டை வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் என்.சங்கர். இவர், கடந்த 2021 மே 12-ம் தேதி. பொதுமக்கள் நலன் சார்ந்த தகவல்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டு, கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். ஆனால், வருவாய்த்துறையினர் அதற்கு உரிய பதிலளிக்கவில்லை.

சங்கர் தொடர்ந்து 3 முறை மனு கொடுத்து தகவல்களைக் கேட்டும் வருவாய்த் துறையினர் பதிலளிக்காமல் மெத்தனமாக இருந்துள்ளனர். இதையடுத்து, 2021 ஆக.6-ம் தேதி தகவல் அளிக்காத தலைமையிடத்துத் துணை வட்டாட்சியர் மீது, சென்னை நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் சங்கர் புகாரளித்தார்.

இது தொடர்பாக இம்மாதத் தொடக்கத்தில் சென்னையில் உள்ள தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணையின் முடிவில், சங்கருக்கு தகவல் அளிக்காத கும்பகோணம் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ரூ. 15 ஆயிரத்தை இழப்பீடாக வழங்க மாநிலத் தலைமை தகவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.