ஓபிஎஸ்ஸுக்கு வாக்களித்தோருக்கு நன்றி தெரிவித்து ஃபிளக்ஸ் வைத்த பாஜகவினர் @ அறந்தாங்கி


புதுக்கோட்டை: ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு இரண்டாம் இடம் பிடித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாக்களித்தோருக்கு நன்றி தெரிவித்து அறந்தாங்கியில் பாஜகவினர் ஃபிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டப்பேரவை தொகுதியை உள்ளடக்கிய ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் இண்டியா கூட்டணியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஷ் கனி அறந்தாங்கி தொகுதியில் 81,208 வாக்குகள் உட்பட மொத்தம் 5.09 வட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இவரை எதிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அறந்தாங்கி தொகுதியில் 41,026 வாக்குகள் உட்பட மொத்தம் 3.42 லட்சம் வாக்குகளைப் பெற்று 2-ம் இடத்தை பிடித்தார். அறந்தாங்கி முன்னாள் எம்எல்ஏ இ.ஏ.ரெத்தினசபாபதியும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்தார்.

இந்நிலையில், அறந்தாங்கி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாக்களித்தோருக்கு நன்றி தெரிவித்து அறந்தாங்கி அண்ணா சிலை அருகே பாஜக சிறுபான்மையினர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் சி.அந்தோணி சாமி, மாவட்ட துணைத் தலைவர் ஜெ.ஜகுபர் அலி ஆகியோர் ஃபிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். அதில், 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ள மோடிக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குவினரை முந்திக்கொண்டு ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாஜகவினர் ஃபிளக்ஸ் பேனர் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

x