ரயில் பாதையில் சிக்கிய பசு: மீட்கச் சென்ற விவசாயியும் உயிரிழப்பு @ தருமபுரி


தருமபுரி: பாலக்கோடு அருகே ரயில் பாதையில் சிக்கிய பசுவை மீட்கச் சென்ற பெண் விவசாயி மற்றும் பசு மீது ரயில் மோதி உயிரிழந்தனர்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த கடமடை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சாந்தன். இவர் மனைவி முத்தம்மாள்(69). இவர் நேற்று (ஜூன் 7) மாலை கடமடை பகுதியில் ரயில் பாதையையொட்டி மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது காரைக்காலில் இருந்து பெங்களூரு நோக்கி செல்லும் பயணிகள் ரயில் அவ்வழியே சென்றது. அந்த ரயில் அப்பகுதியை நெருங்குவதற்கு சற்று நேரத்துக்கு முன்பாக, முத்தம்மாளின் பசுமாடு தண்டவாளத்தை கடக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக மாட்டின் கால் தண்டவாளத்தில் சிக்கிக் கொண்டது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த முத்தம்மாள் பசு மாட்டை மீட்க கடுமையாக போராயுள்ளார். ஆனால், பசுவை மீட்கும் முன்பாக ரயில் நெருங்கி வந்து பசுமாட்டின் மீதும் முத்தம்மாள் மீதும் மோதியது. இந்த விபத்தில், பசு மாடும் முத்தம்மாளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தருமபுரி ரயில்வே போலீஸார் முத்தம்மாளின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பசுமாட்டின் உடலை வனத்துறையினர் மூலம் அகற்றப்பட்டது. இந்த விபத்து குறித்து தருமபுரி ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.