மத்திய மண்டலத்தில் ஜொலிக்காத பாஜக கூட்டணி - ஏழிலும் டெபாசிட் இழப்பு!


நாகப்பட்டினம்: அமமுக, ஓபிஎஸ் அணி ஆகியவற்றுக்கு ஓரளவு வாக்கு வங்கி உள்ளதாக கருதப்படும் மத்திய மண்டலத்தில் அதன் கூட்டணியில் உள்ளபாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்துள்ளனர். அமமுகவுக்கும், ஓபிஎஸ் அணிக்கும் மத்திய மண்டலத்தில், குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி இருப்பதாக கருதப்படுகிறது.

இதேபோல, பாமகவுக்கும் தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிதம்பரம், பெரம்பலூர் தொகுதிகளில் கணிசமான வாக்குவங்கி உள்ளது. இந்த 3கட்சிகளும்பாஜக கூட்டணியில் உள்ளதால், மத்திய மண்டலத்தில் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் குறிப்பிடத்தக்க வாக்குகளை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

அதனால் தங்களுக்கு சாதகமான தொகுதிகளை பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளும் கேட்டுப் பெற்றன. அதன்படி, மயிலாடுதுறை தொகுதியில் பாமகவும், திருச்சியில் அமமுகவும் களம் இறங்கின. மேலும், பெரம்பலூர் தொகுதியில் கடந்த முறை எம்.பியாக இருந்தவரும், ஐஜேகே நிறுவனருமான பாரிவேந்தர், தனது சமுதாய மக்கள் அதிகம் வசிக்கும் பெரம்பலூர் தொகுதியிலேயே மீண்டும் போட்டியிட்டார். கரூர், தஞ்சாவூர், சிதம்பரம், நாகை ஆகிய தொகுதிகளில் பாஜக போட்டியிட்டது.

இதில் பல தொகுதிகளில் பாஜக கூட்டணி கட்சியினர் திமுக, அதிமுகவுக்கு இணையாக தீவிர பிரச்சாரத்திலும் ஈடுபட்டனர். இதனால், மத்திய மண்டலத்தில் சில தொகுதிகளில் வெற்றியும், சில தொகுதிகளில் கணிசமான வாக்குகளையும் பெற முடியும் என பாஜக கூட்டணி வேட்பாளர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு எதிர்பார்த்த மகிழ்வை தரவில்லை. பாஜக கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் டெபாசிட் கூட வாங்க முடியாத அளவுக்கு படுதோல்வியை சந்தித்துள்ளனர். இதில், அதிகபட்சமாக தஞ்சாவூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் 1,70,613 வாக்குகள் பெற்று 3-ம் இடம் பிடித்தார்.

அடுத்து, சிதம்பரம் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி 1,68,493 வாக்குகளும், மயிலாடுதுறை பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் 1,66,347 வாக்குகளும், பெரம்பலூர் தொகுதியில் எம்.பியாக இருந்தவரும், வேட்பாளருமான பாரிவேந்தர் 1,61,866 வாக்குகளும், கரூர் பாஜக வேட்பாளர் வி.வி.செந்தில் நாதன் 1,02,482 வாக்குகளும் மட்டுமே பெற்று 3-ம் இடம் பிடித்தனர்.

மேலும், நாகை பாஜக வேட்பாளர் ரமேஷ் கோவிந்த் 1,02,173 வாக்குகளும், திருச்சி அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் 1,00,747 வாக்குகளும் பெற்று, நாம் தமிழர் கட்சிக்கு அடுத்தபடியாக 4-வது இடத்தையே பெற முடிந்தது.

தெற்கில் அதிகம்... மத்தியில் குறைவு... - தமிழகத்தில் பாஜக கூட்டணிக்கு அதிக அளவாக தென் மண்டலத்தில் தான் 22.4 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இக்கூட்டணி மேற்கு மண்டலத்தில் 18.9 சதவீத வாக்குகளையும், வடக்கு மண்டலத்தில் 17.5 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது.

மிகக் குறைந்த அளவாக மத்திய மண்டலத்தில் வெறும் 12.6 சதவீத வாக்குகளை மட்டுமே பாஜக கூட்டணி பெற முடிந்துள்ளது. அதேசமயம், நாம் தமிழர் கட்சிக்கு மத்திய மண்டலத்தில் தான் அதிகபட்சமாக 10.9 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இக்கட்சிக்கு தெற்கு மண்டலத்தில் 9.5 சதவீத வாக்குகளும், வடக்கு மண்டலத்தில் 7.2 சதவீத வாக்குகளும், மேற்கு மண்டலத்தில் 6.9 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன.

x