‘தீப்பெட்டி’ போன்ற ‘பிஸ்கட்’ சின்னத்துக்கு 15,000 வாக்குகள் - திருச்சி சுயேச்சை வேட்பாளருக்கு இன்ப அதிர்ச்சி


திருச்சி: திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் துரை வைகோவின் தீப்பெட்டி சின்னத்தைப் போன்றே இருந்ததால் பிஸ்கட் சின்னத்தில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளருக்கு 14,796 வாக்குகள் கிடைத்துள்ளன.

திருச்சி மக்களவைத் தொகுதியில் மதிமுக சார்பில் தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்ட துரை வைகோ 3.13 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்தத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட செல்வராஜ் என்பவர் ஒவ்வொரு சுற்றிலும் ஏறத்தாழ 700 வாக்குகள் வரை பெற்றார். இவர், வாக்கு எண்ணிக்கையின் நிறைவாக 14,796 வாக்குகள் பெற்று, பிரதான 4 வேட்பாளர்களுக்கு அடுத்து 5-வது இடத்தை பெற்றார்.

இவர் அதிகபட்சமாக கந்தர்வக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் 3,279 வாக்குகளை பெற்றிருந்தார். அவர் பிரச்சாரமே செய்யாத நிலையில், எப்படி இவருக்கு இவ்வளவு வாக்குகள் கிடைத்தன என அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அவருக்கு ஒதுக்கப்பட்ட சின்னம், மதிமுகவின் தீப்பெட்டி சின்னம் போன்றே இருந்ததால் தான், அதிகப்படியான வாக்குகள் கிடைத்தது தெரியவந்தது என அரசியல் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

x