திமுக கூட்டணி வெற்றிக்கு ஸ்ரீபெரும்புதூர், காஞ்சியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன்


தாம்பரம்: ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் மீண்டும் வெற்றியை பரிசளித்த தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி கூறும் வகையில், காஞ்சி வடக்கு திமுக சார்பாக கூட்டம் நடத்தப்படும் என மாவட்ட செயலாளரும், அமைச்சருமான தா. மோ. அன்பரசன் அறிவித்துள்ளார்.

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிகளில் தங்களுக்கு வெற்றியை வசமாக்கி தந்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தை நடத்த காஞ்சி வடக்கு திமுக முடிவு செய்துள்ளது. காஞ்சி வடக்கு மாவட்டத்தில் உள்ள தாம்பரம், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளில் நன்றி தெரிவிக்கும் கூட்டம்நடத்தப்படவுள்ளது.

இதில் தமிழகஅமைச்சர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனர். இது குறித்து அமைச்சர் தா.மோ. அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள பெரும்புதூர், காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் வெற்றிக்கு காரணமாக இருந்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது.

அதன்படி. ஆலந்தூர் தொகுதியில் ஜூன் 12-ம் தேதி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று உரையாற்றுகிறார். அதனை தொடர்ந்து செங்கல்பட்டில் 13-ம் தேதிநடைபெறும் கூட்டத்தில் அமைச்சர் ராஜ கண்ணப்பனும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 16-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பனும், தாம்பரம் தொகுதியில் 18-ம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரனும், திருப்போரூர் தொகுதியில் 19-ம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் அமைச்சர் சிவ.மெய்யநாதனும், 20-ம் தேதி பல்லாவரம் தொகுதியில் நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலுவும் சிறப்புரையாற்றுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.