தமிழகத்தில் புதிதாக 10 இடங்களில் சுங்கச்சாவடிகள்: ஆர்டிஐ தகவலால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி


மதுரை: தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் சார்பில் தமிழகத்தில் புதிதாக 10 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்க உள்ளதாக வெளியான ஆர்டிஐ தகவலால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழக சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், மதுரை, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், விதிகளை மீறி தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் சுங்கச்சாவடிகளை அமைத்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்த சுங்கச்சாவடிகளை ரத்துசெய்யக் கோரி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அடிக்கடி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு மதுரை ஒத்தக்கடை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி வாகனஓட்டிகள் மனு கொடுத்தனர்.

திமுக ஆட்சிக்கு வந்ததும்,கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றநடவடிக்கை எடுக்கப்படும் என்றுதேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். ஆனால், இதுவரை கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், தமிழகத்தில் மேலும் புதிதாக 10 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில், (ஆர்டிஐ) வெளியான தகவலால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சிஅடைந்துள்ளனர்.

மதுரையைச் சேர்ந்த மருதுபாண்டி என்பவர், இந்திய தேசியநெடுஞ்சாலைத் துறை ஆணையத்துக்கு ஆர்டிஐ மூலம் பல்வேறு கேள்விகளை முன்வைத்து, மனு அளித்திருந்தார்.

அந்த கேள்விகளுக்கு வந்த பதில்கள் வருமாறு: நாடு முழுவதும் 26 மண்டலங்களின் கீழ் சுமார் 805 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தின் மதுரை மண்டலத்தின் கீழ் 28, சென்னை மண்டலத்தின் கீழ் 31 என மொத்தம் 59 சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன.

இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பாக புதிய சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன.

குறிப்பாக, மதுரை மண்டலத்தின் கீழ் மதுரை, திண்டுக்கல்,காரைக்குடி மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் 10 சாலைகள்அமைக்கும் பணி நடந்து வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை ஏற்கெனவே 59 சுங்கச்சாவடிகள் செயல்படும்நிலையில், தற்போது கூடுதலாக 10 சுங்கச்சாவடிகள் விரைவில் திறக்கப்பட உள்ளன.

மதுரை மாவட்டத்தில் மதுரை மேலூர் முதல் காரைக்குடி வரைநான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. அதுபோல, வாடிப்பட்டி முதல் தாமரைப்பட்டி வரை சுற்றுவட்டச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது இந்த இரண்டுஇடங்களில் விரைவில் புதிய சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

இவ்வாறு ஆர்டிஐ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x