அதிமுக-பாஜக கூட்டணி முறிந்ததற்கு அண்ணாமலைதான் முக்கிய காரணம்: எஸ்.பி.வேலுமணி கருத்து


கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. படம்: ஜெ.மனோகரன்

கோவை: அதிமுக-பாஜக கூட்டணி முறிவுக்குஅண்ணாமலைதான் முக்கிய காரணம் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

கோவை மக்களவைத் தொகுதிதேர்தல் முடிவுகள் தொடர்பாக, அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதிமுக கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தலைமை வகித்தார். கூட்டத்தில், தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது: 2021 சட்டப்பேரவைத் தேர்தலில்கோவை மாவட்டம் முழுவதும்உள்ள அனைத்து சட்டப்பேரவைத்தொகுதிகளிலும் வெற்றிபெற்றோம். 2019-ல் 19.35 சதவீத வாக்குகள் பெற்ற நிலையில், 2024 தேர்தலில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து, 20.46 சதவீதவாக்குகளை வாங்கி உள்ளோம். தேர்தல் அரசியலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம்தான்.

இரண்டாம் கட்ட அதிமுக தலைவர்கள் அதிகமாக பேசினார்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியது சரியல்ல.பாஜக கூட்டணியில் அதிமுக இருந்தபோது தமிழிசை, எல்.முருகன் போன்றவர்கள் தலைவர்களாக இருந்தனர். அப்போது எந்தப் பிரச்சினையும் வந்தது இல்லை.

பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பின்னர், கூட்டணியில் இருந்துகொண்டே அண்ணா, ஜெயலலிதா,பழனிசாமி ஆகியோர் குறித்து விமர்சனம் செய்தார். அதிமுக-பாஜக கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் முக்கிய காரணம். இதே கூட்டணி இருந்திருந்தால் 30 முதல் 35 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்போம்.

கோவை தொகுதியில் கடந்த தேர்தலைக் காட்டிலும் கூடுதலாக வாக்குகளைப் பெற்றுள்ளோம். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்தான் ஆட்சியை இழந்தோம். தற்போது தேர்தல் தோல்வியை படிப்பினையாகக் கொண்டு, மக்கள் பணியாற்றுவோம். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் கூட்டணி அமைத்து, தமிழகத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம்.

இவ்வாறு எஸ்.பி.வேலுமணி கூறினார்.