2026 சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது: அண்ணாமலை திட்டவட்டம்


கோவை / சென்னை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம். தமிழகத்தில் படிப்படியாக பாஜக வெற்றி பெறும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 35 இடங்களில் வெற்றி பெற்று இருப்போம் என அதிமுக தரப்பில் கூறப்படுகிறது. அக்கட்சியின் பொதுச் செயலாளர்பழனிசாமிக்கும், எஸ்.பி.வேலுமணிக்கும் இடையே ஏதோ பிரச்சினை தொடங்கியுள்ளதாகவே இதை நான் பார்க்கிறேன்.

2019-ல் ஆளுங்கட்சியாக இருந்தபோதுகூட அதிமுகவால் மக்களவைத் தேர்தலில் ஓரிடத்தில்கூட வெற்றி பெற முடியவில்லை. அதிமுக தலைவர்களை மக்கள் நிராகரித்துள்ளனர் என்பதையே 2024 தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

பாஜக தொண்டர்கள் மொட்டை அடிப்பது, விரலை வெட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. பொது இடங்களில் ஆட்டை வெட்டி வீடியோ வெளியிடுவது மிகவும் கண்டனத்துக்கு உரியது. நான் கோவையில்தான் இருக்கப் போகிறேன். திமுகவினருக்கு கோபம் இருந்தால், என் மீது கை வைத்துப் பார்க்கட்டும்.

தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாததற்கு நான் தான் காரணம் என்று எஸ்.வி.சேகர் கூறியுள்ளார். அவர் யார்என்றே எனக்குத் தெரியாது. என்னுடைய செயல்பாடுகளால்தான் பாஜக தமிழகத்தில் இரட்டை இலக்க வாக்கு சதவீதத்தை அடைந்துள்ளது. கோவை தொகுதியில் முன்பு போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணனைவிட நான் பெற்ற வாக்குகள் குறைவு என்று எஸ்.பி.வேலுமணி, தவறான புள்ளி விவரங்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்துள்ளார். தமிழகத்தில் 2026-ல் பாஜக கூட்டணி ஆட்சிதான் அமையும். அதிமுகவுடன் மீண்டும்கூட்டணி வைக்க வாய்ப்பில்லை.

இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

விமர்சிக்க தகுதியில்லை... பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிமுக, வரலாறு காணாத தோல்வி அடைந்துள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலின்போது பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தோற்றோம் என்று கூறிய அதிமுக 2-ம் கட்டத் தலைவர்கள், தற்போது கூட்டணி வைக்காததால்தான் தோற்றோம் என்கின்றனர். இதுவே அண்ணாமலையின் வியூகத்துக்கு கிடைத்த வெற்றி. அதிமுக தலைவர்கள், திமுகவின் சதி வலையில் விழுந்து விட்டனர். திமுகவின் வெற்றிக்கு மறைமுகமாக உதவுபவர்களுக்கு, பாஜகவையோ, அண்ணாமலையையோ விமர்சிக்கத் தகுதியில்லை" என்று தெரிவித்துள்ளார்.

x