பிரதமர் மோடி சிறப்பான ஆட்சி வழங்க வேண்டும்: ராமதாஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோர் வாழ்த்து


சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு, 3-வது முறை பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாமக நிறுவனர் ராமதாஸ்: இந்திய வரலாற்றில் ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு, தொடர்ந்து 3-வது முறையாக பிரதமர் பொறுப்பை ஏற்கும் தலைவர் மோடிதான். கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றத்துக்கு அவர் ஆற்றிய பணிகள்தான் இந்த வெற்றியை தேடி தந்துள்ளன. பொருளாதாரம், சமூகநீதி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் புரட்சிகரமான திட்டங்களை செயல்படுத்துவீர்கள் என ஒட்டுமொத்த மக்களும் நம்புகின்றனர். அவர்களது நம்பிக்கையை நிறைவேற்றவும், சிறப்பான ஆட்சியை வழங்கவும் வாழ்த்துகிறேன்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையின்கீழ் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வெற்றி, மாற்றத்துக்கான ஊக்கியாக மோடியின் பங்கை வலுப்படுத்துகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் அதிகாரம் அளிக்கிறது. பிரதமர் மோடியின் தலைமையில் உலக வல்லரசாக மாறுவதற்கான பாதையில் இந்தியா செல்கிறது.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: மக்களவைத் தேர்தலில் தேசியஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்று, மக்களின் பேராதரவை பெற்றிருப்பது பாராட்டுக்குரியது, பெருமைக்குரியது. மத்தியில் ஆட்சி அமைக்க, தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக மோடியை, கூட்டணிகட்சிகள் ஒருமனதாக தேர்வு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரை வரவேற்று, வாழ்த்துகிறேன்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், 3-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்க உள்ள மோடிக்கும் எனது வாழ்த்துகள். இந்தியாவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு, தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சிக்கு வருவது, இந்த கூட்டணி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது.

முன்னாள் எம்.பி. சரத்குமார்: மத்தியில் ஆட்சி அமைக்க உள்ள தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை தாங்கும் பாஜகவுக்கும், 3-வது முறையாக பிரதமராக பதவியேற்கும் மோடிக்கும் எனது நல்வாழ்த்துகள்.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

x