ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க பாஜக கூட்டணி தலைவர்கள் டெல்லி பயணம்


பாஜக தலைமை அலுவலகம் | கோப்புப் படம்

சென்னை: டெல்லியில் இன்று நடைபெறும் பாஜக கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க தமிழக தலைவர்கள் செல்கின்றனர்.

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 240 இடங்களை கைப்பற்றியுள்ளது. மத்தியில் ஆட்சி அமைக்க 272 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்பதால்,பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், கூட்டணி பலத்துடன் பாஜகஆட்சி அமைக்கிறது. இந்நிலையில், கடந்த 5-ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பாஸ்வான், மஜத தலைவர் எச்.டி. குமாரசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக மோடி தேர்வு செய்யப்படுவதாகவும் இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள்கூட்டம் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று(7-ம் தேதி) நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்தும், கூட்டணி கட்சிகள் சார்பில் மக்களவை குழு தலைவராக மோடியை தேர்வு செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

இந்நிலையில், தமிழக பாஜக கூட்டணி கட்சி தலைவர்களும், இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இதற்காக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். அதேநேரத்தில் பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம், ஜி.கே.வாசன் ஆகியோரும் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளனர்.

அன்புமணி ராமதாஸ் இன்று (7-ம் தேதி) டெல்லி புறப்படுகிறார். மேலும், தேவநாதன் யாதவ், பாரிவேந்தர், ஜான்பாண்டியன், ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

x