பாஜக நிர்வாகியை அனுமதியின்றி விசாரணைக்கு அழைக்க கூடாது: சிபிசிஐடி போலீஸாருக்கு கோர்ட் உத்தரவு


சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக மாநில அமைப்புச் செயலாளரான கேசவ விநாயகனை நீதிமன்ற அனுமதியின்றி விசாரணைக்கு அழைக்கக்கூடாது என சிபிசிஐடி போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரம் இதுதொடர்பான வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும் மறுப்பு தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் நேரத்தில்நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், திருநெல்வேலி பாஜக வேட்பாளரான நயினார் நாகேந்திரனின் உதவியாளர்கள் கொண்டு சென்றரூ.4 கோடி ரொக்கப் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து நயினார் நாகேந்திரன் உள்பட பலரிடமும் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த வழக்கில் பாஜகமாநில அமைப்புச் செயலாளரான கேசவ விநாயகனுக்கும் போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர்.

இந்த சம்மனை எதிர்த்தும், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும் கேசவ விநாயகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது கேசவ விநாயகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ், நேற்று முன்தினம் மனுதாரர் விசாரணைக்கு ஆஜரானபோது அவரிடம் பலமணிநேரம் போலீஸார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் தற்போது அவருடைய செல்போன், சிம் கார்டுகளையும், 4 மாதங்களுக்கு முன்பாக அவர் எங்கு சென்றார், யாருடன் பேசினார் போன்ற விவரங்களையும் கோரியுள்ளனர். மாநில அமைப்புச் செயலாளரான அவர் தமிழகத்தின் தேர்தல் பொறுப்பாளர் மட்டுமின்றி மற்ற மாநிலங்களின் மேற்பார்வையாளராகவும் உள்ளார் என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, மனுதாரரின் செல்போனும், சிம் கார்டும் உங்களுக்கு எதற்குதேவைப்படுகிறது? இது துன்புறுத்தலுக்கு சமமானது. அந்த செல்போனை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள் என போலீஸாருக்கு சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

அதற்கு காவல்துறை தரப்பில்,இந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டபோது மனுதாரர் எங்கு இருந்தார் என்பதில் சந்தேகம் உள்ளது. விசாரணையின்போது அவர் எங்கு இருந்தார் என்பதையும் தெரிவிக்க மறுக்கிறார். வாட்ஸ் ஆப் கால் மூலமாக சிலருடன் பேசியுள்ளார். அந்த விவரங்கள் தேவைப்படுகிறது என்பதால்தான் அவருடைய செல்போனையும், சிம் கார்டுகளையும் கோருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், மனுதாரரின் தொடர்பு பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. மனுதாரரை துன்புறுத்தும் நோக்கில் செல்போன், சிம் கார்டுகளை சமர்ப்பிக்கும்படி விசாரணைஅதிகாரி சம்மன் பிறப்பித்துள்ளதால் அவர் வரம்பு மீறி செயல்படுகிறார் என்பது தெளிவாகிறது. எனவே மனுதாரரை விசாரணை என்ற பெயரில் அழைத்து துன்புறுத்தக் கூடாது.

அதேநேரம் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விசாரணைக்கு உகந்தது அல்லஎன்பதால் வழக்கை ரத்து செய்ய முடியாது. தேவைப்பட்டால் மனுதாரரை நீதிமன்ற அனுமதியுடன்தான் விசாரணைக்கு அழைக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.

மீண்டும் சம்மன்: இந்த விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாததால், மீண்டும் சம்மன் அனுப்ப சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

x