அண்ணாமலை படத்துடன் ஆடு வெட்டிய வீடியோ: எஸ்பியிடம் கிருஷ்ணகிரி பாஜகவினர் புகார்


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் படத்தை ஆட்டின் தலையில் மாட்டி, ஆட்டை தேசிய நெடுஞ்சாலையில் தலையை துண்டித்து சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க பாஜகவினர் எஸ்பியிடம் புகார் அளித்துள்ளனர். இது குறித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் சிவபிரகாசம் மற்றும் கட்சியினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏடிஎஸ்பி சங்குவிடம் மனு அளித்தனர்.

இது தொடர்பாக மாவட்ட தலைவர் கூறியது: "தனது செல்போன் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு வீடியோ வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தேன். அந்த வீடியோவில் சில சமூக விரோதிகள் ஆட்டின் கழுத்தில், பாஜக தலைவர் அண்ணாமலை புகைப் படத்தை மாட்டி, ஆட்டை நடுரோட்டில் வைத்து வெட்டியுள்ளனர். பின்னர், அண்ணாமலை ஆடு, பலி ஆடு என முழக்கமிட்டு, அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் அதை பரப்பி வன்மத்தையும், பிரிவினையும் மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தும் வகையில் செய்துள்ளனர்.

மேலும், அண்ணாமலைக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தச் சம்பவத்தில் பையூரில் சிக்கன் கடை நடத்தி வரும் மதி, டீக்கடை நடத்தி வரும் ருத்ர மணி, திராவிட கழகத்தை சேர்ந்த செல்வேந்திரன், இளங்கோவன், சிற்றரசு, பாரத் மற்றும் 10 பேர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் நாகரீமற்ற, அநாகரீகமான இந்த செயலை கண்டிக்கிறோம்" என அவர் கூறினார்.