அதிமுக - பாஜக கூட்டணி நீடித்திருந்தால் 30 - 35 தொகுதிகளில் வென்றிருப்போம்: எஸ்.பி.வேலுமணி


கோவை: அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு அண்ணாமலை தான் காரணம் என்று முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

கோவை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் குறித்த அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று கோவையில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

கூட்டத்துக்குப் பின்னர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: "மக்களவைத் தேர்தலில் கோவை மக்கள் ஒரு தீர்ப்பை அளித்துள்ளனர். நாங்கள் வாக்களித்த மக்களை மதிக்கக் கூடியவர்கள். கடந்த 2019 தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்புக்குப் பின்னர் 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் கோவை மாவட்டம் முழுவதும் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றோம். 2019-ல் 19.35 சதவீத வாக்குகள் பெற்ற நிலையில், 2024 தேர்தலில் தேமுதிக ஆகிய கட்சிகளை மட்டுமே கூட்டணி வைத்து 20.46 சதவீத வாக்குகளை வாங்கி உள்ளோம்.

தேர்தல் அரசியலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். பாஜக தலைவர் அண்ணாமலையை இரண்டாம்கட்ட அதிமுக தலைவர்கள் அதிகமாக பேசினார்கள் என கூறுவது சரியல்ல. பாஜக கூட்டணியில் அதிமுக இருந்தபோது தமிழிசை மற்றும் எல்.முருகன் போன்றவர்கள் தலைவர்களாக இருந்தனர். ஆனால் அப்போது எந்த பிரச்சினையும் வந்தது இல்லை.

அண்ணாமலை மாநில தலைவரான பிறகு கூட்டணியில் இருந்து கொண்டே அண்ணா, ஜெயலலிதா, பழனிசாமி ஆகியோர் குறித்து விமர்சனம் செய்தார். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதுக்கு அண்ணாமலை தான் காரணம். இதே கூட்டணி இருந்திருந்தால் 30 முதல் 35 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்போம். கோவை தொகுதியில் கடந்த முறையை விட கூடுதலாக வாக்கு வாங்கி உள்ளோம். அதிமுகவுக்கு சிறு சரிவு வரும்போதெல்லாம் பிரம்மாண்ட வெற்றி பெறுவோம். அதிமுக-பாஜக கூட்டணி முறிவுக்கு அண்ணாமலை தான் முழு காரணம்.

அதிமுக தலைவர்களை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்த நிலையில், கூட்டணியில் இருந்து விலகினோம். அதிமுகவைப் பொருத்தவரை கூட்டணி தர்மத்தை காக்கும் வகையில் செயல்படுவோம். ஆனால் திமுகவினரோ, அதிமுக பாஜகவின் பி டீம் என்று தவறான பிரச்சாரம் செய்து வந்தனர். இதனால் சிறுபான்மையின மக்கள் அதிமுகவை நம்பாமல் செய்துவிட்டனர். கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் குறைந்தவாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சியை இழந்தோம்.

இப்போது தேர்தல் தோல்வியை படிப்பினையாக எடுத்துக் கொண்டு மக்கள் பணியாற்றுவோம். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்போம். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேர்தலில் வாக்களித்த கோவை மக்களுக்கு அவர் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு வேலுமணி தெரிவித்தார்.

பேட்டியின் போது எம்எல்ஏ-க்கள் பொள்ளாச்சி வி.ஜெயராமன், அம்மன் அர்ச்சுணன், ஏ.கே.செல்வராஜ், கே.ஆர்.ஜெயராம், பி.ஆர்.ஜி.அருண்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

x