ஜிப்மர்: புதுச்சேரி - திண்டிவனம் சாலையில் நடை மேம்பாலம் கட்டப்படுமா?


புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை எதிரே புதுச்சேரி - திண்டிவனம் சாலையில் நடை மேம்பாலம் இல்லாததால் நோயாளிகள், பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

புதுச்சேரி கோரிமேட்டில் ஜிப்மர் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு புதுச்சேரி, தமிழக நோயாளிகள் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஜிப்மருக்கு சிகிச்சை பெற வந்து செல்கின்றனர். இதனால் ஜிப்மர் பகுதியில் எப்போதும் கூட்ட நெரிசல் காணப்படுகிறது. இந்நிலையில், ஜிப்மர் மருத்துவமனைக்கு வருகை தரும் நோயாளிகள், பொதுமக்கள் அதன் பிரதான நுழைவு வாயில் எதிரே புதுச்சேரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை கடப்பது என்பது சிரமமாக மாறியுள்ளது.

இந்தப் பகுதியில் நடைமேம்பாலம் இல்லாததால் சாலையின் நடுவே சென்டர் மீடியனில் உள்ள இடைவெளியை அடிக்கடி பயன்படுத்தி சாலையை கடக்க வேண்டி இருக்கிறது. இதன் காரணமாக, நோளிகள் மற்றும் அவர்களது உதவியாளர்கள், பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சாலையில் பாதசாரிகள் கடக்கும் இடங்கள் குறிக்கப்பட்டிருந்தாலும் இந்திரா நகர் சந்திப்பில், அவர்கள் சாலையைக் கடக்க உதவும் வகையில் போலீஸார் யாரும் நிறுத்தப்படவில்லை.

ஆகவே இந்த பகுதியில் நோயாளிகள், பொதுமக்கள் பாதுகாப்பாக சென்றுவர ஏதுவாக நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை எழுந்து வருகிறது. இதனிடையே ஜிப்மர் மருத்துவமனை எதிரே நடை மேம்பாலம் கட்ட முடிவு செய்து, திட்டமும் தயார் செய்யப்பட்டது. ஆனால், பல மாதங்கள் கடந்த நிலையில் நடை மேம்பாலம் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் தெரியவில்லை. இன்னும் பேச்சு வார்த்தை அளவிலேயே அந்தத் திட்டம் இருந்து வருகிறது.

இது குறித்து நோயாளிகள், பொதுமக்கள் தரப்பில் கூறியதாவது, "ஜிப்மருக்கு வருகை தரும் பெரும்பாலனோர் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் தான். அதிகளவு பேருந்துகளில் தான் வருகை தருகின்றோம். இங்கு சாலையை கடப்பது என்பது கடினமாக உள்ளது. இதனால் நீண்ட நாட்களாக ஜிப்மர் எதிரே நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பலமுறை மருத்துவமனை நிர்வாகத்திடமும், அரசியல் பிரதிநிதிகளிடமும் தெரிவித்தும் பலனில்லை. ஜிப்மரில் உள்ள மருந்தகங்களில் அடிக்கடி மருந்துகள் தீர்ந்துபோகின்றன.

குறிப்பாக, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள், தனியார் மருந்தகங்களில் மருந்துகளை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் எந்நேரமானாலும் புதுச்சேரி - திண்டிவனம் சாலையை கடந்து சென்றுதான் மருந்துகளை வாங்க வேண்டியிருக்கிறது. இந்த சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் சாலையை கடப்பது என்பது ஆபத்தாக உள்ளது. அதே சமயம் ஜிப்மரில் அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு ஜிப்மர் எதிரே நடைமேம்பாலம் கட்டுவது அவசியமாக உள்ளது என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கருதுகிறது.

ஆனால் ஜிப்மர் நிர்வாகமோ சுரங்கபபாதை (சப்-வே) கட்டும் முடிவில் உள்ளது. இது தொடர்பாக ஒருமித்த கருத்து எட்டப்படாமல் உள்ளதால் இழுபறி நீடித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, ஜிப்மர் எதிரே மேம்பாலம் கட்டுவது தள்ளிப்போகிறது. ஜிப்மர் நிர்வாகமும், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமும் இணைந்து ஒருமித்த முடிவுக்கு வந்து, விரைவில் இதற்கு ஒரு தீர்வை எட்ட வேண்டும்” என்றனர்.

அரசு தரப்பில் இது குறித்து கேட்டபோது, “நடை மேம்பாலம் கட்டுவதற்கான திட்டம் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டு பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.