சேத்துப்பட்டு - ஸ்டெர்லிங் சாலை சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப் பணிகளை செப்டம்பரில் முடிக்க திட்டம் 


சென்னை ஸ்டெர்லிங் சாலை ஓரத்தில் மெட்ரோ சுரங்க ரயில் நிலைய அமைப்பதற்கான ஆரம்பக் கட்ட பணி நடைபெற்று வருகிறது.

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடத்தில், சேத்துப்பட்டில் இருந்து ஸ்டெர்லிங் சாலை வரை சுரங்கப்பாதை பணி தீவிரமடைந்துள்ளது.

இத்தடத்தில் சுரங்கப்பாதை பணிகளை செப்டம்பரில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 3 வழித்தடங்களில் 116.1 கி.மீ. தொலைவில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் ஒரு வழித்தடம் மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான மூன்றாவது வழித்தடம் ஆகும்.

45.4 கி.மீ. தொலைவு கொண்ட இந்த வழித்தடத்தில் மாதவரம் பால்பண்ணை மற்றும் பசுமை வழிச்சாலையில் சுரங்கப்பாதை பணிகள் அடுத்தடுத்து தொடங்கி நடைபெறுகின்றன. இதன் ஒரு பகுதியாக, 2.8 கி.மீ. தொலைவில் சேத்துப்பட்டில் இருந்து நுங்கம்பாக்கம் வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கியது. தற்போது இப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: ''சேத்துப்பட்டில் இருந்து ஸ்டெர்லிங் சாலை நோக்கி மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி தீவிரமடைந்துள்ளது. இந்தப் பணியில் இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் ஈடுபட்டுள்ளன. இந்த சுரங்கப்பாதையில் 706 மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்.

முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரத்தை பயன்படுத்தி தற்போது வரை 565 மீட்டர் வரை சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது சுரங்கம் தோண்டும் இயந்திரத்தை பயன்படுத்தி 170 மீட்டர் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. 22 மீட்டர் ஆழத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஸ்டெர்லிங்சாலை நோக்கிச் செல்லும் போது, ஆழம் சற்று குறையவாய்ப்பு உள்ளது. இத்தடத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை வரும் செப்டம்பரில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.'' இவ்வாறு அவர்கள் கூறினர்.