தேர்தல் தோல்வி: நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசனின் கட்சிப் பதவிகளுக்கு சிக்கல் 


அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன்.

திண்டுக்கல்: மக்களவை தேர்தலில் கட்சித் தலைமைக்கு ஒத்துழைக்காததால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், நத்தம் ஆர்.விசுவநாதன் ஆகியோரிடம் உள்ள மாவட்டச் செயலாளர் பதவிகளை பறிக்க கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது.

திண்டுக்கல் மக்களவை தொகுதி அதிமுகவை அடையாளம் காட்டிய தொகுதி. எம்ஜிஆர் கட்சி துவங்கிய பிறகு போட்டியிட்ட முதல் தேர்தல் திண்டுக்கல் மக்களவை தொகுதி இடைத்தேர்தல். இந்தத் தேர்தலில் தான் இரட்டை இலை சின்னம் முதன் முதலில் அறிமுகமானது. அதிமுக சார்பில் முதல் பிரதிநிதியை மக்களவைக்கு அனுப்பிவைத்த திண்டுக்கல் தொகுதியை கடந்த இரண்டு தேர்தலாக அதிமுகவினர் கண்டும் காணாமல் விட்டுவைத்திருக்கிறார்கள்.

எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்த காலங்களில் தொடர்ச்சியாக அதிமுக போட்டியிட்ட திண்டுக்கல் மக்களவை தொகுதியை முதன்முறையாக எடப்பாடி பழனிச்சாமி கடந்த தேர்தலில் பாமகவுக்கு தாரை வார்த்தார். மாவட்டத்தின் முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சி.சீனிவாசன், நத்தம் ஆர்.விசுவநாதன் ஆகியோருக்கிடையே இருந்த கோஷ்டிபூசலை சமாளிக்க முடியாமலேயே தொகுதியை பாமகவுக்கு தாரை வார்த்தார் இபிஎஸ். இங்கு அதிமுக நேரடியாக போட்டியிடாததால், அறிமுகமே இல்லாத திமுக வேட்பாளர் வேலுச்சாமி ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் கடந்த தேர்தலில் வெற்றிபெற்றார்.

இந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளரை நிறுத்த கட்சித் தலைமை விரும்பியது. ஆனால், வழக்கம் போல் நத்தம் விசுவநாதனும் திண்டுக்கல் சீனிவாசனும் தலைமைக்கு ஒத்துழைப்பு தரவில்லை எனக் கூறப்படுகிறது. வேட்பாளராக திண்டுக்கல் சி.சீனிவாசனின் மகன் அல்லது நத்தம் ஆர்.விசுவநாதனின் மருமகன் கண்ணன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என திண்டுக்கல் மாவட்ட அதிமுகவினரே எதிர்பார்த்தனர். இருவரும் போட்டியிட முன்வரவில்லை. தேர்தலில் தங்களது சொந்தங்களை நிறுத்தாமல் முன்னாள் அமைச்சர்கள் இருவருமே ஜகா வாங்கியதால் கூட்டணிக் கட்சியான எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டது.

இரண்டு முன்னாள் அமைச்சர்களும் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக் உடன் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். எனினும் தேர்தல் நாளான்று பூத் ஏஜெண்டுகளுக்கு கூட இருவரும் சரியாக உதவவில்லை என்ற குற்றச்சாட்டு எழந்தது. முதன் முதலில் அதிமுக வெற்றிபெற்ற திண்டுக்கல் தொகுதியை கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுப்பதில் திண்டுக்கல் மாவட்ட அதிமுக தொண்டர்களுக்கு விரும்பமில்லாத நிலை தான் காணப்படுகிறது. இருந்தபோதும் கடந்த இரண்டு தேர்தல்களாக இந்தநிலை தொடர்வதால் அதிமுக தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர், மாநில பொருளாளர் என இரண்டு பதவிகளை திண்டுக்கல் சி.சீனிவாசன் வகித்துவருகிறார். இதேபோல் மாநில துணைப்பொதுச் செயலாளர், திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் என இரண்டு முக்கிய பதவிகளை நத்தம் ஆர்.விசுவநாதன் வகித்துவருகிறார். இவர்களுக்கு மாநில பதவியை மட்டும் தந்துவிட்டு, மாவட்டச் செயலாளர் பதவிகளை புதியவர்களுக்கு வழங்க கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

அதன்படி திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளராக வேடசந்தூர் முன்னாள் எம்எல்ஏ-வான பரமசிவம், கிழக்கு மாவட்டச் செயலாளராக நத்தம் விசுவநாதனின் மைத்துனர் கண்ணன் ஆகியோரை நியமிக்க கட்சித் தலைமை முடிவெடுத்திருப்பதாக திண்டுக்கல் அதிமுகவில் பேச்சு அடிபடுகிறது.