தென்காசி: கடந்த தேர்தலை விட குறைவான வாக்கு பெற்ற திமுக


டாக்டர் ராணி ஸ்ரீகுமார் | கோப்புப் படம்

தென்காசி: தென்காசி (தனி) தொகுதியில் கடந்த தேர்தலைக் காட்டிலும் இம்முறை திமுக குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது. ஆனபோதும் இம்முறை கூடுதலான வாக்கு வித்தியாசத்தில் தொகுதியை தக்கவைத்துள்ளது.

2019 மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த பெரும்பாலான கட்சிகள் இந்தத் தேர்தலிலும் கூட்டணியில் நீடித்தது. கடந்த தேர்தலில் ஒரே அணியாக தேர்தலை சந்தித்த அதிமுகவும் பாஜகவும் இம்முறை தனி அணிகளை அமைத்து போட்டியிட்டன. கடந்த முறை தனித்து போட்டியிட்ட அமமுக இம்முறை பாஜக கூட்டணியில் களம்கண்டது. நாம் தமிழர் கட்சி தொடர்ந்து தனியாக களம் கண்டது.

தென்காசி தொகுதியில் கடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் தனுஷ் எம்.குமார் 4,76,156 வாக்குகள் பெற்று 1,19,286 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக 3,56,870 வாக்குகளும், அமமுக 92,446 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 59,123 வாக்குகளும் பெற்றன. இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் 4,25,679 வாக்குகள் பெற்று 1,96,199 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த தேர்தலை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றிருந்தாலும் கடந்த தேர்தலில் திமுக பெற்ற மொத்த வாக்குகளை விட இந்த தேர்தலில் சுமார் 50 ஆயிரம் வாக்குகள் குறைந்துள்ளது. இருப்பினும் தேர்தலுக்கு புதுமுகமான டாக்டர் ராணி ஸ்ரீகுமார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பல தேர்தல்களை சந்தித்த அனுபவம் பெற்ற புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் ஆகியோரை தோற்கடித்து கவனம் பெற்றுள்ளார்.

அதிமுக, பாஜக கூட்டணி நீடித்திருந்தால் தென்காசி தொகுதியை அதிமுக கூட்டணி கைப்பற்றும் நிலை ஏற்பட்டிருக்கலாம். கூட்டணி உடைந்ததால் கடந்த தேர்தலில் பெற்றதை விட அதிமுகவுக்கு 1,27,480 வாக்குகள் குறைவாக கிடைத்துள்ளது. தென்காசி தொகுதியில் பாஜகவுக்கு கணிசமாக வாக்குகள் இருந்தாலும் இந்த முறை அந்த கட்சியினர் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய அளவில் வாக்குகள் கிடைக்கவில்லை. கடந்த தேர்தலில் அமமுக 92,446 வாக்குகளை பெற்றது.

இந்த முறை பாஜக கூட்டணியில் அமமுக, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், பாமக, தமாகா, ஓபிஎஸ் அணி, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் இருந்த போதும் அக்கூட்டணியின் வேட்பாளரான ஜான் பாண்டியனுக்கு 2,08,825 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. அதே சமயம் திமுக, அதிமுக, பாஜக கூட்டணிகளுக்கு வாக்கு சதவீதம் அதிகரிக்காத நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு கடந்த தேர்தலில் கிடைத்ததை விட இம்முறை இரட்டிப்பான வாக்குகள் கிடைத்துள்ளன.

கடந்த தேர்தலில் 59,123 வாக்குகளை பெற்ற நாம் தமிழர் கட்சி இந்த முறை 1,30,335 வாக்குகள் பெற்றுள்ளது. மேலும், அதிமுகவை விட நாம் தமிழர் கட்சிக்கு தபால் வாக்குகள் அதிகமாக கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. தபால் வாக்குகளைப் பொறுத்தவரை திமுகவுக்கு 2,654, பாஜகவுக்கு 1,843, நாம் தமிழர் கட்சிக்கு 1,585, அதிமுகவுக்கு 1,190 என பதிவாகி இருந்தன. இருப்பினும் இந்தத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழந்துள்ளது.

2024 தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:டாக்டர் ராணி ஸ்ரீகுமார் (திமுக) 4,25,679, டாக்டர் கிருஷ்ணசாமி (அதிமுக கூட்டணி) 2,29,480, ஜான் பாண்டியன் (பாஜக கூட்டணி) 2,08,825, இசை மதிவாணன் (நாதக) 1,30,335, மகேஷ்குமார் (பகுஜன் சமாஜ்) 3,554, ராமசாமி (விரோ கி வீர் இந்தியன் பார்ட்டி) 3,412, உமா மகேஸ்வரி (தேசிய மக்கள் சக்தி கட்சி) 1,655, சீதா (பகுஜன் திராவிட கட்சி) 2,476,

ஆறுமுகசாமி (சுயே) 1,313, ராஜசேகர் (சுயே) 993, கற்பகவல்லி (கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட சுயேச்சை) 6,314, பி.கிருஷ்ணசாமி (சுயே) 1,350), எம்.கிருஷ்ணசாமி (சுயேச்சை) 1,833, மன்மதன் (சுயே) 3,278, முத்தையா (சுயே) 1,457, நோட்டா (17,165). தென்காசி தொகுதியில் போட்டியிட்ட 15 வேட்பாளர்களில் 11 பேர் நோட்டாவுக்கும் குறைவான வாக்குகளே பெற்றுள்ளனர்.

x