காஞ்சிபுரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு வங்கி உயர்வு


மாமல்லபுரம்: காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளை விட கூடுதலாக 47 ஆயிரத்து 501 வாக்குகளை பெற்றுள்ளதால், இத்தொகுதியில் நாம் தமிழர் கட்சிக்கு செல்வாக்கு அதிகரித்து வருவதாக அரசியல் கட்சி பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் (தனி) மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் செல்வம் 5,86,044 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில், இ்த்தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சந்தோஷ் குமார், மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டப்பேரவை தொகுதிகளான செங்கல்பட்டில் 28 ஆயிரத்து 280 வாக்குகளும், திருப்போரூரில் 22,981 வாக்குகளும், செய்யூரில் 12,190 வாக்குகளும், மதுராந்தகத்தில் 13,239 வாக்குகளும், உத்திரமேரூரில் 15,711 வாக்குகளும், காஞ்சிபுரத்தில் 17,051 வாக்குகளும் பெற்றுள்ளார். ஆக மொத்தம் இந்தத் தொகுதியில் 1,10,272 வாக்குகள் பெற்றுள்ளது நாம் தமிழர் கட்சி. இது கடந்த தேர்தலைவிட கூடுதலான வாக்கு சதவீதம் ஆகும்.

2019 மக்களவைத் தேர்தலில் இங்கு நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சிவரஞ்சனி, 62 ஆயிரத்து 771 வாக்குகள் பெற்றிருந்தார். ஆனால், இந்தத் தேர்தலில் நாதக வேட்பாளராகப் போட்டியிட்ட சந்தோஷ்குமாருக்கு கடந்த தேர்தலை விட கூடுதலாக 47 ஆயிரத்து 501 வாக்கும் கிடைத்துள்ளது. இதன்மூலம், காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சிக்கான வாக்கு வங்கி அதிகரித்து வருவது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி உயர்வதால் பாமக மற்றும் மதிமுக கட்சிகளின் வாக்கு சதவீதம் வெகுவாக சரிந்து வருகிறது. சட்டப்பேரவை தேர்தலின் போது நாதகவுக்கு இன்னும் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்பதால் மற்ற கட்சிகளின் நிர்வாகிகள் கலக்கமடைந்துள்ளனர்.

ஓட்டுக்காக பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்ட எதையும் வழங்காமலேயே நாதகவின் வாக்கு வங்கி தொடர்ந்து அதிகரித்து வருவதாக பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதனால், தேர்தலில் தோற்றாலும் சீமானின் தம்பிகள் மகிழ்வுடன் வலம் வருகின்றனர்.