3-வது இடத்துக்கு தள்ளப்பட்டதால் மதுரை அதிமுக நிர்வாகிகள் மாற்றமா?


மதுரை: மதுரையில் அதிமுக மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டதால் அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அதிர்ச்சியடைந் துள்ளனர். தேர்தல் பணியில் ஒத்துழைக்காத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.

மதுரை மக்களவைத் தொகு தியில் இதுவரை நடந்த தேர்தலில் திமுக, அதிமுக தலா ஒரு முறை மட்டுமே வெற்றிபெற்றுள்ளன. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகள் அதிகமுறை வெற்றிபெற்றுள்ளன.

கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சு.வெங்கடேசன் 4, 47, 075 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். அதிமுகவைச் சேர்ந்த ராஜ்சத்தியன், 3,07,680 வாக்குகள் பெற்றிருந்தார்.

அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை 85, 747 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அழகர் 85,048 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாண்டியம்மாள், 42,901 வாக்குகளும் பெற்றிருந் தனர்.

இந்நிலையில் 2024 மக்களவைத் தேர்தலில் மீண்டும் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட சு.வெங்கடேசன் வெற்றிபெற்றுள் ளார். பாஜக வேட்பாளர் ராம னிவாசன் இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளார். அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் மூன்றாம் இடமும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்தியாதேவி நான்காம் இடமும் பிடித்தனர்.

கடந்த முறை இரண்டாமிடம் பிடித்த அதிமுக, இந்த முறை மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட் டுள்ளது. அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் பல்வேறு கட்சிகளுக்குச் சென்றுவிட்டு சமீபத்தில்தான் அதிமுகவில் சேர்ந்தார். கட்சியில் சேர்ந்த குறுகிய காலத்திலேயே மதுரை தொகுதி அதிமுக வேட்பாளராக்கப்பட்டார்.

மேலும், மாவட்டச் செயலாளர்களான செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா ஆகியோர் இந்தத் தேர்தலில் பெரிதும் ஆர்வமாகப் பணியாற்றவில்லை என்றும் புகார் கூறப்படுகிறது.

வேட்பாளர் சரவணன் கட்சி தலைமையிடம் ‘சீட்’ பெறும்போது மிகப்பெரிய தொகையை தேர்தல் பணிக்கு செலவழிப்பதாகக் கூறியிருந்ததாகவும், கடைசி நேரத்தில் அதைச் செலவிடாமல் இருந்துவிட்டதாகவும் கூறப்படு கிறது. அதனால், நிர்வாகிகள் கடைசி நேரத்தில் பெயரளவுக்கு தேர்தல் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது.

நிர்வாகிகளை முடுக்கிவிட்டு வேட்பாளரை வெற்றிபெற வைக்க செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா முயற்சி செய்யவில்லை என கட்சியினரே குற்றம்சாட்டுகின்றனர். தென் தமிழகத்தில் மதுரை மாவட்டம் அதிமுகவின் கோட்டையாகத் திகழ்ந்து வந்தது.

அதனாலே, கடந்த முறை சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்தாலும் மதுரை மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் திருப்பரங்குன்றம், மதுரை மேற்கு, மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய 5 தொகுதிகளில் வெற்றிபெற்றது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் இருந்தார். தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் அவர் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தார். அதுபோல், டிடிவி.தினகரனும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார். இந்த இரு முக்கியத் தலைவர்கள் அதிமுக வில் இல்லாதது, அக்கட்சிக்கு மதுரை மட்டுமில்லாது தென் மாவட் டங்களில் வாக்கு சதவீதத்தைப் பாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மதுரை மக்களவைத் தொகுதியில் வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு, மத்தி, மேலூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில், வடக்கு, மேற்கு, தெற்கு, மத்தி தொகுதிகள் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவின் மாநகர் மாவட்டத்தில் வருகின்றன.

மேலூர், கிழக்கு தொகுதிகள் ராஜன் செல்லப்பா மாவட்டச் செயலாளராக உள்ள புறநகர் கிழக்கு மாவட்டத்தில் வருகின்றன. இரு மாவட்டச் செயலாளர்கள் ஒத்துழைப்பு வேட்பாளர் சரவணனுக்கு கிடைக்காததால் அதிமுகவுக்கு இந்தப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மக்களவைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு சரியாக ஒத்துழைக்காத, செயல்படாத அக்கட்சி மாவட்டச் செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என தேர்தலுக்கு முன்னரே கூறப்பட்டு வந்தது.

மதுரை மாநகரில் மிகக் குறைவான வாக்குகளை அதிமுக பெற்றுள்ளதால் மாநகரச் செயலாளர் செல்லூர் கே.ராஜூ மீது நடவடிக்கை பாயலாம் எனக் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக செல்லூர் கே.ராஜூவின் மாநகர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து மற்றொரு புதிய மாவட்டச் செயலாளர் நியமிக்கப்படலாம் எனவும் கூறப்பட்டு வந்தது.

அதனால், தற்போது மக்களவைத் தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதால் புறநகரை போல், மாநகர் இரண்டாகப் பிரிக்கப்படலாம் எனவும், முக்கிய மாவட்ட நிர்வாகிகள் மாற்றப்படலாம் எனவும் கூறப்படுகிறது.