மக்களவை தேர்தல் முடிவுகள்: 2026 சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள படிப்பினை - பழனிசாமி கருத்து


பழனிசாமி | கோப்புப்படம்

சென்னை: மக்களவைத் தேர்தல் முடிவுகள் மூலம், 2026 பேரவை தேர்தலை எதிர்கொள்வதற்கான படிப்பினை என்று அதிமுக பொதுச்செயலாளர்பழனிசாமி கூறியள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

தேர்தல் முடிவுகள் நாம் எதிர்பார்த்தது போலவே அதிகார பலமும், பண பலமும், பொய்ப் பிரச்சார பலமும், அறத்துக்கு அப்பாற்பட்ட சூழ்ச்சி பலமும் மிகுந்தவர்களுக்குச் சாதகமாக வந்திருக்கின்றன. அதிமுக வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனி அதிமுக அவ்வளவுதான் என்று 1980, 2004 மற்றும் 2019மக்களவைத் தேர்தல் முடிவுகளின்போதும், 1996 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவின்போதும், 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாகவும் ஆரூடம் கூறி ஆனந்தப்பட்டவர்களின் அகங்காரத்தை முறியடித்த பெருமை அதிமுக தொண்டர்களுக்கு உண்டு. 2021 சட்டப்பேரவை தேர்தலில் 75 இடங்களைப் பெற்று நாம் யார் என்பதை உலகுக்குக் காட்டினோம்.

இந்தத் தேர்தல் முடிவுகள் நம்மை சோர்வடையச் செய்யாது. 2026 சட்டப்பேரவை பொதுத் தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான பாடமும், படிப்பினையும் நமக்குக் கிடைத்திருக்கிறது. 2026 தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம்.

அல்லும், பகலும் அயராது உழைத்த நிர்வாகிகள், தொண்டர்களின் திருப்பாதம் பணிகிறேன்.இன்னும் தீவிரமாகவும், தீர்க்கமாகவும் பணியாற்றி, தொண்டர்கள் தலைநிமிர்ந்து வெற்றி நடைபோட உறுதி ஏற்கிறேன்.

x