ஓமலூரில் சிறுத்தையை பிடிக்கும் முயற்சி: டிரோன் மூலம் வனத்துறை கண்காணிப்பு


சேலம்: ஓமலூரை அடுத்த காருவள்ளி சுற்று வட்டார கிராம மக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையைப் பிடிக்கும் முயற்சியில் டிரோன் கேமரா, கண்காணிப்பு கேமரா ஆகியவற்றைப் பயன்படுத்தி வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

ஓமலூர் அருகே டேனிஷ்பேட்டை வனச்சரகத்தை ஒட்டியுள்ள காருவள்ளி, எலத்தூர், மேச்சேரி உள்ளிட்ட கிராமங்களில், கடந்த சில மாதங்களாக இரவு நேரத்தில் மாடு, ஆடு, நாய் ஆகியவற்றை கடித்து கொன்று வந்த சிறுத்தை, வனத்துறையினர் வைத்த கண்காணிப்பு கேமராவில் இரு தினங்களுக்கு முன்னர் பதிவானது. அந்த சிறுத்தை, டேனிஷ்பேட்டை வனத்தை ஒட்டிய, மூக்கனூர் என்ற இடத்தில் ஒரு பசு மாட்டை கொன்றுவிட்டு, மறுநாளும் அதே இடத்துக்கு வந்து, இறந்து கிடந்த பசு மாட்டினை தின்று சென்றது.

இதைத் தொடர்ந்து, சேலம் மாவட்ட வன அலுவலர் ஷஷாங் காஷ்யப் ரவி, உதவி வனப் பாதுகாவலர் செல்வகுமார் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான சிறுத்தை பெரிய உடலமைப்பு கொண்டதாக இருப்பதை வனத் துறையினர் உறுதிப் படுத்தினர். சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சுற்று வட்டார கிராமங்களில் வனத்துறையினரும், வருவாய்த்துறையினரும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

சிறுத்தையை பிடிக்கும் வகையில், அதன் நடமாட்டம் கண்டறியப்பட்ட 5 இடங்களில் கூண்டுகளை வைத்து, அதில் இறைச்சி, ஆடு ஆகியவற்றை வைத்து, சிறுத்தையைப் பிடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர். மேலும், டிரோன் கேமராவைப் பயன்படுத்தியும் சிறுத்தையை தேடி வருகின்றனர். வனச்சரகர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தேடுதல் குழுவினரும் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பு மேற்கொண்டுள்ளனர். சிறுத்தை பிடிபட்டால், அதனை தருமபுரி அல்லது ஈரோடு வனப்பகுதிக்குள் விடவும் வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.