காஞ்சிபுரம் வாக்கு எண்ணும் மையத்தில் பணியின்போது மயங்கிய காவலருக்கு உடனடி சிகிச்சை


காஞ்சிபுரம் (தனி) மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணும் மையத்தில் மயங்கிய காவலருக்கு சிறப்பு மருத்துவ முகாமில் மருத்துவர்கள் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் (தனி) மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர், உடல் சோர்வு காரணமாக மயங்கிய நிலையில் அவருக்கு சிறப்பு மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் (தனி) தொகுதியில் பதிவான வாக்குகள் பொன்னேரிக்கரை பகுதியில் உள்ள அண்ணா பல்கலையின் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணும் மையத்தில் எண்ணப்பட்டு வருகின்றன. இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும், வாக்கு எண்ணும் பணியில் அரசு பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு ஏதேனும் அவசர மருத்துவ சிகிச்சைகள் வழங்குவதற்காக சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் 2 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் உடல் சோர்வு மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக மயங்கினார். அவரை, சக காவலர் மீட்டு மருத்துவ முகாமுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, மருத்துவர்கள் அவரை பரிசோதித்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேலும், ரத்த அழுத்தம் குறித்து பரிசோதித்து தேவையான மருத்துவ சிகிச்சைகளை காவலருக்கு மருத்துவக் குழு வழங்கியது.

x