திமுக கொடி கம்பம் அமைக்கும்போது மின்சாரம் தாக்கி தொண்டர் உயிரிழப்பு @ தி.மலை


இறந்த திமுக தொண்டர் ரகுராமன்

திருவண்ணாமலை: சேத்துப்பட்டு அருகே தேர்தல் நடத்தை விதியால் அகற்றப்பட்டிருந்த திமுக கொடி கம்பத்தை, முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பிறந்தநாளை ஓட்டி இன்று (ஜூன் 3-ம் தேதி) மீண்டும் அமைக்க முயன்றபோது திமுக தொண்டர் உயிரிழந்தார்.

மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தபோது, அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்கள் அகற்றப்பட்டன. இந்நிலையில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்தநாள் விழாவையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கிழக்குமேடு கூட்டுச்சாலையில், அகற்றப்பட்ட திமுக கொடி கம்பத்தை மீண்டும் அமைக்கும் பணியில் திமுகவினர் இனறு(ஜுன் 3-ம் தேதி) ஈடுபட்டனர். சுமார் 30 அடி உயர கொடி கம்பம் திடீரென சாய்ந்து, மேலே சென்ற மின் கம்பியில் விழுந்தது.

அப்போது இடையன்கொளத்தூர் கிராமத்தில் வசிக்கும் ரகுராமன் (35), கிழக்கு மேடு கிராமத்தில் வசிக்கும் கிளை செயலாளர் மணி (50), அப்துல்லா (34) கோதண்டராமன் (33), ராஜி (35) ஆகிய 5 பேர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே ரகுராமன் உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில், வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் கோதண்டராமன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் கிளை செயலாளர் மணி சிகிச்சை பெற்று வருகிறார். ராஜி, அப்துல்லா ஆகியோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இது குறித்து ரகுராமன் தந்தை ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் சேத்துப்பட்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.