மக்கள் தீர்ப்புக்கு தயாராகும் இந்தியா முதல் பாஜக விளம்பர சர்ச்சை வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


மக்கள் தீர்ப்புக்கு தயாராகும் இந்தியா! ஏழு கட்டங்களாக நடந்த மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட உள்ளன. இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் விவரித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், “தேர்தல் மாரத்தான் வெற்றிகரமாக முடிவடைந்திருக்கிறது. 97 கோடி வாக்காளர்கள், 1.50 கோடி தேர்தல் அதிகாரிகள், 10.50 லட்சம் வாக்குச்சாவடிகள், 68,763 கண்காணிப்புக் குழுக்கள், 4 லட்சம் வாகன பயன்பாடு என பிரம்மாண்டமான முறையில் இந்த தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில், 64.20 கோடி வாக்காளர்கள் வாக்களித்திருக்கிறார்கள். இது ஒரு உலக சாதனை” என்று குறிப்பிட்டார்.

மேலும், “கடந்த 2019 மக்களவைத் தேர்தலோடு ஒப்பிடுகையில் இந்த தேர்தலில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. 2019ல் 540 மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. இம்முறை 39 மறுவாக்குப்பதிவு மட்டுமே நடைபெற்றுள்ளது. இந்த 39-ல், 25 தொலைதூரப் பகுதிகளான அருணாச்சலப் பிரதேசத்திலும் மணிப்பூரிலும் நடந்துள்ளன. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவாக ஜம்மு காஷ்மீரில் அதிக வாக்காளர்கள் வாக்களித்துள்ளது பாராட்டுக்குரியது.

வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. துரிதமாக செயல்படுவது, வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவது, பதில்கூறும் பொறுப்பை ஏற்று செயல்படுவது என நாங்கள் செயல்பட்டுள்ளோம். அந்த வகையில் இந்திய தேர்தல் ஆணையம் நிகரற்ற நம்பகத்தன்மையைக் கொண்டுள்ளது” என்றார். முதல் அரை மணி நேரம் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதன்பின், வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும் என்று அவர் தெரிவித்தார். முன்னதாக, தேர்தல் ஆணையத்தை அணுகிய எதிர்க்கட்சிகள், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

“தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தயார்”- தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள 39 மையங்களிலும் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட 58 பொது பார்வையாளர்கள் வந்து விட்டனர். வாக்கு எண்ணிக்கையின் போது, ஒவ்வொரு சுற்றின் விவரமும், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க, தலைமைச் செயலகத்தில் கட்டுப்பாட்டறை உள்ளது. கட்டுப்பாட்டறையில், 12 டிஆர்ஓக்கள் பணியில் இருப்பார்கள். அவர்கள் புகார்களை கவனிப்பார்கள்.

தபால் வாக்குகளைப் பொறுத்தவரை, சுற்றுவாரியாக எண்ணப்படாது. தபால் வாக்குகள் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா? அதில் உள்ள கையொப்பம் சரியாக உள்ளதா? என்பதை பார்த்து, எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். தபால் வாக்குகள் எண்ணிக்கை 8 மணிக்கு தொடங்கும். 8.30 மணிக்கு தபால் வாக்கு எண்ணி முடிக்காவிட்டாலும், மின்னணு இயந்திர வாக்குகள் தொடர்ந்து எண்ணப்படும். தபால் வாக்குகள் இல்லாவிட்டால், மின்னணு வாக்குகள் 8 மணிக்கு எண்ணப்படும், என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியுள்ளார். இதனிடையே, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் செவ்யாக்கிழமை முதல் புதன்கிழமை வரை தடையில்லா மின்சாரம் வழங்குவதை அனைத்து செயற்பொறியாளர்களும் உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

“பொறுத்திருந்து பாருங்கள்” - சோனியா காந்தி கருத்து: தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாளை ஒட்டி, டெல்லியில் உள்ள திமுக அலுவலகத்தில் திங்கள்கிழமை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, கருணாநிதி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் மக்களவை தேர்தல் முடிவுகள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “நாங்கள் பொறுமை காக்கிறோம். பொறுத்திருந்து பாருங்கள். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளுக்கு முற்றிலும் நேர்மாறாக தேர்தல் முடிவுகள் இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். தேர்தல் முடிவுகள் இண்டியா கூட்டணிக்கு சாதகமாக அமையும்” என்று கூறினார்.

கருத்துக் கணிப்பு - மம்தா கருத்து: ஊடக நிறுவனங்கள் தங்களது ஆதாயத்துக்காக இரண்டு மாதங்களுக்கு முன்னர் வீட்டிலேயே சிலரை கொண்டு தயாரித்தது தான் தேர்தலுக்கு பிந்தைய இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள். அதற்கு எவ்வித மதிப்பும் இல்லை. 2016, 2021 மாநில சட்டப்பேரவை தேர்தல் குறித்த கருத்துக் கணிப்பு முடிவுகள் என்ன ஆனது என்பதை நாம் பார்த்துள்ளோம். மத்தியில் அமையும் இண்டியா கூட்டணி ஆட்சியில் நாங்கள் அங்கம் வகிப்பதில் எங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை என நான் கருதுகிறேன். எங்களுக்கு அழைப்பு வந்தால் நாங்கள் இணைவோம். மற்ற பிராந்திய கட்சிகளை போலவே திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் இயங்கும், என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

உச்சத்தில் இந்திய பங்குச் சந்தை: கடந்த சனிக்கிழமை மக்களவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி இருந்தன. இதில் பெரும்பாலான கருத்துக் கணிப்பு முடிவுகள் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என சொல்லி இருந்தன. இந்தச் சூழலில் இந்திய பங்குச் சந்தை வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கட்கிழமை புதிய உச்சத்தை எட்டியது.

ம.பி.யில் டிராக்டர் - ட்ராலி கவிழ்ந்து விபத்து: 13 பேர் பலி: மத்திய பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் ஞாயிறு இரவு டிராக்டர் - ட்ராலி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் ராஜஸ்தானின் மோதிபுரா கிராமத்தில் இருந்து மத்திய பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டம் குலாம்பூருக்கு ஒரு திருமண நிகழ்ச்சிக்காக சென்றவர்களாவர்.

டெல்லி அருகே தாஜ் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளில் தீ விபத்து: டெல்லி அருகே துக்ளகாபாத் - ஓக்லா இடையே ஓடும் தாஜ் எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகள் தீப்பிடித்து திங்கள்கிழமை மாலை விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.

பாஜக விளம்பரம்: அதிமுக கண்டனம்: “தமிழ் இனத்தை இழிவுபடுத்தி பார்க்க வேண்டும் நோக்கத்தில் தமிழர் பாரம்பரியமிக்க வேட்டி-சட்டையுடன் ஒருவர் வாழை இலையில் உணவருந்துவதை போலவும் அதை மற்றொருவர் கேலி செய்வதை போலவும் ஒரு தேர்தல் விளம்பரத்தை பாஜக வெளியிட்டுள்ளது. வி.கே.பாண்டியனை போன்ற ஒருவர் வேட்டி-சட்டை அணிந்து இருப்பதாக அனைத்து விளம்பரங்களிலும் பாஜக சித்தரித்துள்ளது. எல்லாவற்றிலும் ஒரே நாடு என கொக்கரிக்கும் பாஜக‌... எதற்காக வி.கே.பாண்டியனை கண்டு அஞ்சுகிறது?” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக கூறியுள்ளார்.

இஸ்ரேலியர்கள் நுழைய தடை விதிக்க மாலத்தீவு திட்டம்: இஸ்ரேலியர்கள் மாலத்தீவுக்குள் நுழைவதைத் தடை செய்யும் வகையிலான சட்டத்தை முன்மொழிய அந்நாடு திட்டமிட்டுள்ளது. இதனிடையே மாலத்தீவில் இருக்கும் தங்கள் குடிமக்கள் வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது. இஸ்ரேல் மக்கள் தங்கள் நாட்டுக்கு வருவதைத் தடை செய்யும் வகையில் சட்டங்களைத் திருத்த அதிபர் முய்சு தலைமையிலான மாலத்தீவு அரசு முடிவு செய்தது. மேலும், பாலஸ்தீனர்களுக்காக நிதி திரட்டுவதற்காக ஒரு தூதரும் நியமிக்கப்படவிருக்கிறார்.

“இந்திய அணியின் பயிற்சியாளராக விரும்புகிறேன்” - கவுதம் கம்பீர்: அபுதாபியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கம்பீர், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நான் பணியாற்ற விரும்புகிறேன். தேசிய அணிக்கு பயிற்சி அளிப்பதை காட்டிலும் வேறெதுவும் சிறந்த கவுரவம் இருக்காது. 140 கோடி மக்களின் பிரதிநிதியாக இயங்க வேண்டி இருக்கும். இந்தியா உலகக் கோப்பையை வெல்லும். அதற்கு அச்சமின்றி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்ற விரும்புபவர்கள் விண்ணப்பம் செய்வதற்கான கெடு தேதி கடந்த மாதம் நிறைவடைந்தது. அதற்கு கம்பீர் விண்ணப்பித்துள்ளாரா என்பது குறித்த தகவல் எதுவும் உறுதி செய்யப்படவில்லை.