“கருத்துக் கணிப்புகளால் வயிறு எரிகிறது... 2 நாட்களாக சாப்பிடவில்லை!” - ஆர்.பி.உதயகுமார்


தேனி: “தற்போது வெளியிடப்பட்டு வரும் கருத்துக் கணிப்புகள் வாக்களித்த மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

வாக்கு எண்ணும் மைய முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் தேனியில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர்கள் எஸ்.டி.கே.ஜக்கையன், முருக்கோடை ராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதிமுக வேட்பாளர் நாராயணசாமி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியது: “தேனி மக்களவைத் தொகுதியைப் பொறுத்தளவில் திமுக, பாஜகவை விட அதிமுக வேட்பாளர் அனைத்து ஊராட்சிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்துள்ளார். சுமார் 9 லட்சம் வாக்காளர்களை அவர் சந்தித்துள்ளார்.

வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு என்ற பெயரில் பல்வேறு விவாதங்கள் நடக்கிறது. அதில் கருத்து திணிப்பு நடத்தி அதிமுக தொண்டர்களை சோர்வடையச் செய்யும் வேலைகளை செய்து வருகின்றனர். ஆனால், எங்களின் வாக்கு எண்ணும் மைய முகவர்கள் ராணு வீரர்களைப் போல பணியாற்ற உள்ளனர். கடந்த தேர்தலில் பொய் பிரச்சாரத்தால் குறைவான வாக்கு எண்ணிக்கையில் திமுக ஆட்சியைப் பிடித்தது. அதிமுகவுக்கு என்று நிரந்தர வாக்கு வங்கி இருக்கிறது.

அந்த வாக்காளர்கள் எப்போது மாற்றி வாக்களிக்க மாட்டார்கள். இருப்பினும் ஆளும்கட்சி தில்லுமுல்லு செய்வார்களோ என்ற அச்சம் ஏற்பட்டு இருக்கிறது. 40 இடங்களில் 25 இடங்களில் அதிமுக வெற்றி பெறும். குறிப்பாக தேனி தொகுதியில் கண்டிப்பாக வெல்வோம். அதிமுக தொண்டர்களிடம் எந்த சூழ்ச்சியும் எடுபடாது. ஆளும்கட்சியினர் வாக்கு எண்ணிக்கையில் தில்லுமுல்லு செய்ய முயன்றால் எதிர்த்து போராடுவோம்.

வாக்களித்துவிட்டு வந்தவர்களிடம் ரகசிய கருத்துக் கணிப்பு நடத்தியதாக கூறுகிறார்களே இதை எப்படி நம்ப முடியும். 15 லட்சம் வாக்காளர்கள் உள்ள தொகுதியில் அதிகபட்சம் 3 லட்சம் பேரிடம் கேட்டு இருக்கலாம். இதை எப்படி ஒட்டுமொத்த தொகுதிக்குமான கணிப்பாக வெளியிட முடியும். ஆன்லைனில் கருத்துக் கணிப்பை நடத்தினோம் என்கிறார்கள்.

தொகுதியில் 30 சதவீத வாக்காளர்களிடம் வாக்களிப்பு விவரங்களை சேகரித்தால் கூட பரவாயில்லை. இதுபோன்ற கருத்து திணிப்புகளால் வாக்களித்த மக்களுக்கு சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது. இந்த கருத்துக் கணிப்புகளால் வயிறு எரிகிறது. 2 நாட்களாக சாப்பிடவில்லை. மனஉளைச்சல் ஏற்படுத்தி விட்டது” என்று அவர் கூறினார். அமைப்புச் செயலாளர் மகேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் உட்பட பலர் உடனிருந்தனர்.