கோ.சி.மணியின் மணிமண்டபத்தை முதல்வர் திறந்து வைக்க வேண்டும்: ஆடுதுறை பேரூராட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தல்


ஆடுதுறை: திருவிடைமருதூர் வட்டம், ஆடுதுறையில் கட்டப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் கோ.சி. மணியின் மணிமண்டபத்தை தமிழக முதல்வர் திறந்து வைக்க வேண்டும் என ஆடுதுறை பேரூராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானவர்களில் ஒருவராகவும், திமுகவின் மூத்த முன்னோடிகளில் ஒருவராகவும் இருந்தவர் மறைந்த முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி.

கோ.சி.மணிக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அவருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என ஆடுதுறை பேரூராட்சித் தலைவர் ம.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்து இருந்தார்.

அதன்படி, கடந்த 2022, டிச.4-ம் தேதி, பேரூராட்சிக்கு சொந்தமான வீரசோழன் திருமண மண்டபம் அருகில் ரூ. 1 கோடியில் நூலகம், உடற்பயிற்சி கூடம், சிறுவர் விளையாட்டு பூங்கா உள்ளிட்டவைகளுடன் கூடிய மணிமண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

தற்போது அதற்கான பணிகள் மும்மரமான நடைபெற்று வருகிறது. மேலும், அந்த மணிமண்டபம் மேல் தளக் கட்டுமானப் பணிகள் பேரூராட்சி தலைவர் ம‌‌.க‌‌.ஸ்டாலின் முன்னிலையில் சிறப்பு பூஜைகளுடன் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், வரும் செப். 13-ம் தேதி கோ. சி. மணியின் 95-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அன்று, அவரது மணி மண்டபத்தை தமிழக முதல்வர் நேரில் வந்திருந்து திறந்து வைக்க வேண்டும் என பேரூராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள், இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக நிர்வாகிகளிடம் வலியுறுத்தினர்.

இதில், கும்பகோணம் எம்.எல். ஏ. சாக்கோட்டை க. அன்பழகன், முன்னாள் எம்..எல்.ஏக்கள் கல்யாணம், ஜெகவீரபாண்டியன், பேரூராட்சி உறுப்பினரும் கோ.சி. மணி மகனுமான கோ‌.சி.இளங்கோவன் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

x