ஜூன் 4-ல் வாக்குகள் எண்ணிக்கை: மதுரை மருத்துவக் கல்லூரியில் 5 அடுக்கு பாதுகாப்பு


கோப்புப்படம்

மதுரை: மதுரை தொகுதிக்கான வாக்குகள் வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) அன்று எண்ணும் நிலையில், மருத்துவக் கல்லூரி பகுதியில் 5 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மக்களவை தொகுதிக்கான வாக்குகள் எண்ணும் மையமான மதுரை மருத்துவக் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிசிடிவி கேமராக்கள் பொருத்தியும் கண்காணிக்கப்படுகிறது. வேட்பாளர்களின் முகவர்களும் சுழற்சி முறையில் மருத்துவக் கல்லூரி வளாகப் பகுதியில் இருந்து சிசிடிவி காட்சிகளின் மூலம் கண்காணிக்கின்றனர்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) வாக்குகள் எண்ணும் பணி காலையில் திட்டமிட்ட நேரத்தில் தொடங்க இருக்கிறது. இதையொட்டி, வாக்குகள் எண்ணும் மைய பகுதியில் கட்சியினர், வேட்பாளர்களின் முகவர்கள் என, ஏராளமானோர் கூடும் சூழலில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாநகர காவல் ஆணையர் ஜே.லோகநாதன் மேற்பார்வையில் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள், எஸ்ஐக்கள் அடங்கிய சுமார் 1500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இயந்திரங்கள் இருக்கும் சீலிடப்பட்ட அறை (ஸ்ட்ராங் ரூம்), வாக்குகள் எண்ணும் அறை, இவ்வறை க்கு வெளிப்பகுதி, மருத்துவக் கல்லூரி வாசல்கள், இதிலிருந்து குறிப்பிட்ட தூரம் வரையில் சுற்றுப்பகுதி என, 5 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு அடுக்கிலும் அதிகாரிகள் தலைமையில் குறிப்பிட்ட போலீஸார் நிறுத்தப்படுகின்றனர். இதற்காக வெளியூர்களில் இருந்தும் கூடுதலாக பட்டாலியன், ஆயுதப்படை போலீஸாரும் வரவழைக்கப்பட்டுள்ள தாக என காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.