கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகே வெறிநாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகள்


கரூர்: கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகேயுள்ள நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். விவசாயியான இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை அன்று தனது ஆடுகளை அப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.

அப்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த வெறிநாய்கள் ஆடுகளை கடித்து குதறியது. இதில் 6 ஆடுகள் அங்கேயே உயிரிழந்தன. 4 ஆடுகள் காயமடைந்தன. உயிரிழந்த ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

ஆடுகள் உயிரிழந்தது குறித்து விவசாயி சக்திவேல் தகவல் தெரிவித்ததன் பேரில் சிந்தலவாடி கிராம நிர்வாக அலுவலர் பிரபு சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தார். பின்னர் கால்நடை மருந்துவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்து உயிரிழந்த ஆடுகளை பரிசோதனை செய்வதற்கு எடுத்து சென்றனர்.

இப்பகுதியில் வெறிநாய்கள் சுற்றி திரிவதன் காரணமாக அப்பகுதியில் மேயும் ஆடுகளை தொடர்ந்து கடித்து வருவதால் ஆடுகள் உயிரிழக்கும் சம்பவத்தால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே வெறிநாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி ஆடு வளர்ப்போர் எதிர்பார்க்கின்றனர்.