14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை


கோப்புப்படம்

சென்னை: தமிழகத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், வேலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 5-ம் தேதி வரை ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

6-ம் தேதி ஒரு சில இடங்களிலும், 7-ம் தேதி ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 4 செமீ, கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், தருமபுரி மாவட்டம் பென்னாகரம், திருச்சி மாவட்டம் சிறுகமணி ஆகிய இடங்களில் தலா 3 செமீ, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, இலுப்பூர், கோவை மாவட்டம் சோலையார், தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, நீலகிரி மாவட்டம் பார்வூட், குந்தா பாலம், கிருஷ்ணகிரி மாவட்டம் பாம்பார் அணை ஆகிய இடங்களில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று சில பகுதி களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யவாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 95 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.

ஜூன் 2,3 தேதிகளில் குமரிக் கடல்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், இடையிடையே 65 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.