“நவீன இந்தியாவின் சிற்பி!” - மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் புகழாரம்


சென்னை: “நவீன இந்தியாவின் சிற்பி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி” என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சிறப்புக் கட்டுரை:

“சூரியன் உதிக்கும்போதே இருளை விரட்டிக் கொண்டுதான் உதிக்கிறது”, “சட்டங்கள் சமுதாய வளர்ச்சிக்கும், மறுமலர்ச்சிக்கும் பயன்பட வேண்டுமே தவிர சர்வாதிகாரிகளுக்கு சாமரம் வீசப் பயன்படக்கூடாது” - இந்தப் புகழுக்குரிய சொற்றொடர்களுக்குச் சொந்தக்காரர்தான் மறைந்த முதல்வர் கருணாநிதி. பெரியாரும், அண்ணாவும் இணைந்துக் கண்டெடுத்த திராவிடப் பொன்னாட்டின் மாபெரும் தலைவரான அவரை, எண்ணுகிற தருணமெல்லாம் என் கடைழியோரம் கடல் நிரம்புகிறது. தாயின் கருணையை தன்னுருவாய்க் கொண்டு பூமியில் தோன்றிய புரட்சிமிகுத் தலைவர் அவர். அவர்தான் என் வாழ்வின் கிழக்கு. அவரே என் பொதுவாழ்வின் பல்கலைக்கழகம்.

கருணாநிதி எனும் பல்கலைக்கழகத்தில் நான் கற்றவை ஏராளம். அன்னைத் தமிழுக்கு அணிகலன் பூட்டி மகிழ்ந்த அந்த பேராளுமைத் தந்தைதான் என் வாழ்வின் திருப்பம். அவரே கனவுகளின் விருப்பம். எந்தவொரு பின்புலமும் இல்லாத ஏழை மகனாய்ப் பிறந்த எனக்கு லட்சியங்களை ஊட்டி வளர்த்த ஆண் வடிவத் தாய் அவர் என்பேன். அவரன்றி இந்த உலகில் நான் அடையாளம் பெறுவதற்கு எவ்வாய்ப்பும் இல்லை.மக்கள் நலமே உயிர் என்றும், மாநிலமே நலனே உடல் என்றும் இறுதி மூச்சுவரை வாழ்ந்து வானலாவிய புகழ்பெற்று நம்மிடமிருந்து விடைபெற்றுச் சென்ற, அந்த ஓய்விலாச் ௲ரியனுக்கு நூற்றாண்டின் நிறைவுநாள் இந்நாள் என்கிறபொழுது என் இதயம் உணர்ச்சிவயத்தில் ததும்புகிறது. வான்மழை விதையின் மீது பொழியும் நேச பாசத்தை, அவர் என்மீது பொழிந்தார். மங்கம்மாள் – மாணிக்கம் என்ற ஏழைப் பெற்றோர்க்கு மகனாய்ப் பிறந்த எம்மை லட்சியக் கனவுகள் ஊட்டி வளர்த்தவர் அவர்.

15 வயதில், பால்மணம் மாறாப் பொழுதில், கால்சட்டைச் சிறுவனாய் அவரைக் கண்டேன். அந்தக் காட்சி இன்னும் என் கண்ணிமைகளுக்குள் காவியம் எழுதிக்கொண்டிருக்கிறது.
சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்க வழிப் பாதையை 1974 ஆம் ஆண்டு திறந்துவைக்க வந்த கருணாநிதி எனும் தத்துவத்தை, வெள்ளைவேட்டிச் ௲ரியனை சுவாசத்தால் தரிசித்தேன். கண்களால் முத்தமிட்டேன். மக்கள் வெள்ளத்தில், அப்பாவின் கைபிடித்து நான் கண்ட காட்சிதான் என் வாழ்வின் திசைகளை மடைமாற்றியது என்பேன். மானுட வெள்ளத்தைக் கண்டு கையசைத்த அந்த இரண்டுகால் சிங்கத்தின் கையைசைப்புதான், “பொதுத்தொண்டாற்ற வா” மகனே, எனும் வார்த்தைகள் சொல்லி அழைத்தாய் என் புத்தியில் நான் எழுதிக்கொண்டேன்.

வளர்இளம் பருவத்திலேயே கட்சிக்கு என்னை அர்ப்பணித்துக் கொண்டேன். கட்சியே மூச்சாகவும், கட்சிக் கொள்கையே என் வாழ்வின் பேச்சாகவும் நான் வகுத்துக்கொண்டேன். கட்சி என்னை வளர்த்தது. தன்னலத்தைக் கிஞ்சித்தும் இதுவரை எண்ணிப்பார்க்கா என் கனவுகளைக் கட்சிதான் லட்சியங்களாக்கியது. கருணாநிதி எனும் போர்க்களப் புயல்தான் என்னைத் தாலாட்டியது. அவர் என்பால் வைத்த அன்பும்-பாசமும் ஆகாயத்திற்கு ஒப்பானது. உண்மையாய், கொள்கைநெறியோடு நான் செயலாற்றியதைத் தவிர அவருக்கு நான் நன்றிக்கடன் செலுத்த என்னிடம் எதுவுமில்லை. இன்றந்த காவிய நாயகரின் மாற்று வடிவமாய், திருஉலகம் போற்றும் திராவிடப் பொன்னாட்டை வழிநடத்துகிற மாண்பமை முதல்வர் ஸ்டாலினின் ஆணைக்கிணங்க பயணிப்பதில் பெரும்பேறு எமக்கு!

மொழிப்போர் களத்தில் அஞ்சாமல் நின்று பகைவென்ற பண்பாட்டுத் தலைவர் கருணாநிதியின் வரலாற்றுச் சாதனைகள் ஒன்றா? இரண்டா? அதுவொரு முடிவிலி. பெண்ணுக்குச் சொத்துரிமையும், கல்வி உரிமையும் ஆணுக்கு நிகராய் சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழும் சமூக உரிமையும் அவரால் வாய்க்கப்பெற்றவை என்பதை உலகறியும். சமயச் சடங்குகளால் சமூகத்தில் நெடுங்காலம் நிலவி வந்த மூடத்தனங்களையும், சீர்கேடுகளையும் களைந்திட்ட கருத்தியல் ஞானிதான் அவர் என்றால் அது மிகையல்ல.சாதிய ஏற்றத்தாழ்வுகளை உடைக்கவும், சமய நல்லிணக்கத்தை வளர்க்கவும் அவரின் எழுதுகோல்தான் இங்கு முக்கால் நூற்றாண்டு களப்பணி செய்தது. அதுதான் நாட்டு மக்களுக்கான நலப்பணி செய்தது. இரட்டைக்குவளை முறையை ஒழிப்பதற்கும், மனிதனை மனிதன் இழுக்கும் கைரிக்சா முறையை அகற்றுவதற்கும் கருணாநிதி இயற்றிய சட்டங்கள்தான் இன்று சமத்துவத்தமிழ்நாடு மலரக் காரணமாய் அமைத்தது.

தலைவர் கருணாநிதி இட்டப் பணிகளை ஆற்றிடும் வல்லமைப் பெற்ற வரலாற்றுத் தலைவர். முதல்வர் ஸ்டாலினின் தலைமையில் தமிழகம் இன்று வீறு நடைப்போட்டு வெற்றிச் சிகரத்தில் ஏறி நிற்கிறது. கருணாநிதியின் மறு உருவாய், ஸ்டாலினின் ஆட்சியில் அனைத்துத் துறைகளும் சாதனைகள் செய்து வருவதை உலகறியும். அந்த வரிசையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆற்றிய பணிகளும் இங்கு நினைவுக்கூரத்தக்கவை என்பேன். ஆட்சி நிர்வாகத் திறனும், ஆளுமை உறுதியும் நிறைந்த மனிதராக விளங்குவதால் முந்தைய அமெரிக்க அரசு முதல்வர் ஸ்டாலினுக்கு “கெண்டகி கர்னல்” விருது அளித்து பெருமைக் கண்டது. அப்படிப்பட்ட புகழ்மிக்கத் தலைவரின் தலைமையில் வழிகாட்டுதலில் நாம் பொறுப்பு வகிகும் மருத்துவத்துறை, மக்களுக்குப் பலப் பல நலத்திட்டங்களை இந்த மூன்றாண்டு காலத்தில் வழங்கியிருக்கிறது.

இந்திய ஒன்றியங்கள் வியந்து பார்க்கும்படி தமிழகத்தில் கொண்டுவரப்பட்ட மக்களைத் தேடி மருத்துவத் திட்டமும், இன்னுயிர்க் காப்போம், நம்மைக் காக்கும் 48 திட்டமும் மக்கள் வரவேற்றுக் கொண்டாடும் மாபெரும் திட்டங்களாகும். கலைஞரின் வருமுன் காப்போம் – இதயம் காப்போம், திட்டங்களும் தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத பங்களிப்பை மக்களுக்கு ஆற்றி வருகின்றன. சிறுநீரகப் பாதுகாப்புத் திட்டமும், தொற்றா நோய்களைத் தடுக்கும் முன்னெச்சரிக்கைத் திட்டமும் தமிழக மருத்துவத்துறையில் பெரும் வரவேற்பு பெற்ற திட்டங்களாக விளங்குகின்றன. முதல்வரின் ஆணைப்படி, நாடு முழுவதும் புதிதாக திறக்கப்பட்டுள்ள 25 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 25 நகர்ப்புற சுகாதார நிலையங்களும், 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்களும் இதுவரை இல்லாத அளவுக்கு மருத்துவத்துறையில் சிகரம் தொட்டிருக்கும் மைல்கல் திட்டங்களாகத் திகழ்கின்றன.

முதல்வரின் ஆணைப்படி 25 புதிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் கட்டப்பட்டு நிறைவடையும் தருவாயில் இருக்கின்றன. அப்பணிகள் எல்லாம் விரைந்து முடிக்கப்பெற்று திராவிட மாடல் நாயகர் தமிழக முதல்வரின் பொற்கரங்களால் விரைவில் திறக்கப்பட இருக்கின்றன என்பது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் மிகப்பெறும் நற்செய்தியாகும். இது மருத்துவத்துறையில் மகத்தான சரித்திரத் திட்டமாகும்.

கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையும், 38 மாவட்டங்களிலும் புனரமைக்கப்பட்ட புதிய மருத்துவக் கட்டிடங்களும், தொய்வின்றி மக்களுக்குக் கிடைக்கின்ற மருத்துவ சேவைகளும், மருத்துவத்துறை அமைச்சர் எனும் முறையில் நாம் மேற்கொள்ளும் ஆய்வுப் பணிகளும் மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கும் அம்சங்கள் என்றால் அது மிகையில்லை. அதுமட்டுமன்று இதுவரை எந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களும், அரசு அதிகாரிகளும் கால்பதிக்காத, 200க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களுக்குச் சென்று ஆய்வுகள் செய்யப்பட்டு மக்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகள் உடனடியாக செய்துத் தரப்பட்டு அவை தொய்வின்றி செயல்பட தமிழக முதல்வரின் வழிகாட்டுதலில் மருத்துவத் துறையின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

மறைந்த முதல்வர் கருணாநிதியின் தொலைநோக்குப் பார்வையில் உருவான 108 அவசர கால ஊர்தி, கலைஞர் காப்பீட்டுத் திட்டம்,வருமுன் காப்போம் திட்டம், நுழைவுத்தேர்வு ரத்து செய்வதற்கான சட்டம், ஒரு மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரித் திட்டம் இவையெல்லாம் அவரது ஆட்சியில் மருத்துவத்துறையில் பெரும் வரலாற்றுப் புரட்சியை ஏற்படுத்திய திட்டங்களாகும். அதன் தொடர்ச்சியாய் கடந்த மூன்று ஆண்டுகளில் திராவிட மாடல் நாயகர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நிறுவப்பட்ட அரசு மருத்துவத் துறையில் மகத்தான சாதனைகள் பலவற்றை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது.

சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் எனும் கொள்கையை அடித்தளமாக் கொண்டு அதில் கட்டமைக்கப்பட்ட திராவிட மாடல் அரசின் மருத்துவச் சாதனைகள் ஆயிரம் ஆயிரம் உண்டு. உலகத்தை மரணப் புன்னகையால் அச்சுறுத்தி, மக்களைத் கண்ணீரில் தத்தளிக்க வைத்த கரோனாவை, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நிறுவப்பட்ட திராவிட மாடல் அரசு எப்படிக் கையாண்டது. மக்களை எவ்விதம் பாதுகாத்தது என்பது நாடறியும், நல்லோர்களின் வீடறியும், அந்த ஏடறியும். எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் அதை எதிர்த்துக் களமாடும் ஆற்றல் நம் முதல்வருக்கு உண்டு. இந்த மூன்றாண்டு கால ஆட்சி அதற்கானச் சான்று. நாம் கட்சியில் ஐக்கியமாகி, பல்வேறு பொறுப்புகளை மேற்கொண்டு, அதைத் திறம்பட செயலாற்றி, செம்மையாக நிறைவேற்றி மக்கள் தொண்டுக்கு அணியமாகி இருக்கிறோம் என்றால் அது தலைவர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலினும் அளித்த வாய்ப்பன்றி வேறென்ன இருக்க முடியும். இவர்கள் இருவரைத் தவிர என் வாழ்வில் வேறு சிறப்பும் பெருமையும் என்ன வாய்த்துவிட முடியும்.

“நவீன இந்தியாவின் சிற்பி” என்று இந்தியர்களால் போற்றப்படும் தலைவர் மறைந்த முதல்வர் கருணாநிதிர அன்றி “விடியல் ௲ரியன்” என் திசையில் வேறு ஒன்றுமில்லை.
இவர்கள் இட்ட கட்டளைக்கு கீழ்ப்படிந்து, அதை மக்களுக்கு நலம்பயக்கும் வண்ணம் செயலாற்றுவதே என் அரசியல் வாழ்வின் லட்சியம் என்று சொல்லலாம். சமூக நீதியின் இமயமாகவும், நெஞ்சுக்கு நீதியின் சிகரமாகவும் இன்றல்ல, என்றைக்கும் விளங்கும் மறைந்த முதல்வர் கருணாநிதியின் புகழ் ஓங்கி ஒலித்துக்கொண்டே இருக்கும். கட்சி வளர்த்த அந்த காவிய நாயகரின் பெயர் இந்த நூற்றாண்டு மட்டுமல்ல. இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் திசைகள் எட்டும் கேட்டுக்கொண்டே இருக்கும். வெற்றிக் கொடியை திமுக ஏற்றிக்கொண்டே இருக்கும்.

x