முதல்போக சாகுபடிக்காக முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு


கூடலூர்: முல்லை பெரியாறு அணையியிலிருந்து கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியின் முதல் போக சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள 14,707 ஏக்கர் பரப்பளவிலான நிலங்களில் இருபோக சாகுபடி நடைபெற்று வருகிறது. முதல் போக நெல் விவசாயத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

இந்தாண்டு உரிய மழை பெய்ததுடன் அணையிலும் போதிய அளவு நீர் நிரம்பி உள்ளதால் ஜூன் முதல் தேதியான இன்று காலை, முதல் போக பாசனத்துக்காக நீர் திறக்கப்பட்டது. பெரியாறு வைகை வடிநில கோட்ட செயற்பொறியாளர் அன்புச்செல்வம் அணையின் ஷட்டரை திறந்து வைத்தார்.

இதனையடுத்து, பெரியாறு அணையிலிருந்து சாகுபடிக்காக விநாடிக்கு 200 கன அடியும், தேனி மாவட்ட குடிநீர் தேவைக்காக 100 கன அடியும் என மொத்தம் 300 கனஅடி நீர் சென்று கொண்டிருக்கிறது. 120 நாட்களுக்கு அணையிலிருந்து நீர் வெளியேற்றப்படும்.

ஆகவே, கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள உத்தமபாளையம், தேனி மற்றும் போடி வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி உயர் மகசூல் பெறும்படி நீர்வளத் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.