வெப்பம் காரணமாக மின் விநியோக சாதனங்களில் ஏற்படும் பழுதால் மின் தடை: மின்வாரியம் விளக்கம்


சென்னை: கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, மின்விநியோக சாதனங்களில் அவ்வப்போது ஏற்படும் பழுதுகள் காரணமாக சில இடங்களில் மின் தடை ஏற்படுகிறது. இருப்பினும், தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில், மின்வாரிய தலைவர் பிரதீப் யாதவ் (கூடுதல் பொறுப்பு) தலைமையில் மாநிலம் முழுவதும் தடையில்லா, சீரான மின்சாரம் வழங்குவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது.

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, மாநிலத்தின் மின்சார தேவை அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த மாதம் 2-ம் தேதியன்று தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மாநிலத்தின் தினசரி மின்தேவை 20,830 மெகாவாட் என்ற புதிய உச்சத்தை எட்டியது.

குறிப்பாக, சென்னை மாவட்டத்தின் உச்சபட்ச மின்தேவை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து நேற்று 4,769 மெகாவாட் என்ற புதிய உச்சத்தை எட்டியது. இந்த மின்தேவையானது மின்வாரியத்தின் மின்னுற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், வெளிச்சந்தை, மின்பரிமாற்றம் மற்றும் குறுகிய கால ஒப்பந்தம் மூலமாக எவ்விதப் பற்றாக்குறையும் இல்லாமல் பூர்த்தி செய்யப்பட்டது.

மேலும், மாநிலத்தின் மின்சாரத் தேவை மற்றும் மின்விநியோகத்தில் எவ்வித இடைவெளியும் இல்லை. மாநிலம் முழுவதும் தடையில்லா, சீரான மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வரப்படுகிறது. எனினும், கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, மின்சார விநியோகப் பாதையில் உள்ள மின்மாற்றிகள், புதைவிட கம்பிகள் மற்றும் மின் கம்பிகளில் அவ்வப்போது ஏற்படும் பழுதுகள் காரணமாக, சில இடங்களில் மின்தடை ஏற்படுகிறது.

இத்தகைய மின் தடைகள் ஏற்படும் போது உடனுக்குடன் சரி செய்யப்பட்டு தடையில்லா சீரான மின்சாரம் வழங்க அறிவுறுத்தப்பட்டது. தொடர்ச்சியாக மின்தடை ஏற்படும் இடங்களில் சம்மந்தப்பட்ட மேற்பார்வைப் பொறியாளர்கள் கள ஆய்வு செய்து மின்தடைக்கான காரணங்களை ஆராய்ந்து அவற்றை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

பொதுமக்கள் மின்தடை தொடர்பாகன புகார்களை 94987 94987 என்ற மின்னகத்தின் மின்நுகர்வோர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டு 24 மணி நேரமும் தெரிவிக்கலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் மின்விநியோகப் பாதையில் உள்ள மின்மாற்றிகள், புதைவட கம்பிகள் மற்றும் மின்கம்பிகளில் அவ்வப்போது ஏற்படும் பழுதுகளை உடனடியாக சரி செய்வதற்காக 60 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து மின் பகிர்மான பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்கள் பங்கேற்றனர்

x