அரசு மருத்துவமனையில் இருந்து ஓய்வுபெற்ற டீன் உள்ளிட்டோருக்கு பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது: மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை


சென்னை: அரசு மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வுபெற்ற டீன் உள்ளிட்டோருக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி நீட்டிப்பு வழங்கக்கூடாது என்று ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மருத்துவர் பி.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் உஷா, ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தி, சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குநர் (டீன் நிலை) பார்த்தசாரதி ஆகியோர் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றனர். அதேபோல், 33 பேராசிரியர்களும் பணி ஓய்வு பெற்றுள்ளனர்.

இந்நிலையில், பணி ஓய்வுபெற்ற பார்த்தசாரதி உள்ளிட்ட சிலருக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மருத்துவர் பி.பாலகிருஷ்ணன் கூறியதாவது:

தமிழக அரசு மருத்துவக்கல்லூரிகளில் பணியாற்றும் 600-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பதவி உயர்வு பெற்று உயர் பொறுப்புகளுக்காக காத்திருக்கின்றனர். அவர்களை தவிர்த்து விட்டு, பணி ஓய்வுபெற்றவர்களை மீண்டும் உயர்பதவிகளில் அமர வைப்பது ஏற்புடையதாக இல்லை.

ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குநர் விமலாவும் அவ்வாறு ஒப்பந்த அடிப்படையில்தான் இதற்கு முன்பு நியமிக்கப்பட்டார். தற்போது சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி நீட்டிப்புவழங்கப்பட்டுள்ளது. இதனால், அடுத்து பதவி உயர்வுக்காக காத்திருப்போர் பாதிக்கப்படுகின்றனர். இந்த நடைமுறையை கைவிட்டு பிறருக்கு வாய்ப்பு தரவேண்டும் என்றார்.