இண்டியா கூட்டணி தலைவர்கள் டெல்லியில் இன்று ஆலோசனை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் திடீர் ரத்து


சென்னை: டெல்லியில் இண்டியா கூட்டணிகட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்றுநடைபெறுகிறது. இதில் பங்கேற்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம்திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25 ஆகிய தேதிகளில் 6 கட்டமாக 485 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் இன்று நிறைவுகட்டமாக 7 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் தேர்தல் நடைபெறுகிறது.

அதன்படி, உத்தர பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்கம், பிஹார், ஒடிசா, இமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், சண்டிகர் ஆகிய மாநிலங்களில் உள்ள மொத்தம் 57 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்காக பல்வேறு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

இதுஒருபுறம் இருக்க, நிறைவுகட்ட தேர்தல் நடைபெறும் நிலையில், இண்டியா கூட்டணி கட்சித் தலைவர்கள் அடுத்தகட்ட நிகழ்வுகள் தொடர்பாக ஆலோசிக்க டெல்லியில் இன்று கூடுகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் மாலை 3 மணிக்கு அவரது தலைமையில் இக்கூட்டம் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில், கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட இண்டியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இறுதிகட்ட தேர்தல் இன்று நடைபெறவுள்ளதாலும் ரீமல் புயல் பாதிப்புகள் தொடர்வதாலும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இண்டியா கூட்டணி உருவாவதில் முக்கிய பங்காற்றிய திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும், இதற்காக முதல்வர் இன்று காலை 7 மணிக்கு டெல்லி புறப்படுவதாகவும் கூறப்பட்டது.

ஆனால் முதல்வரின் டெல்லிபயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பங்கேற்க உள்ளதாகவும், அதற்காக அவர் டெல்லி புறப்பட்டு சென்றதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.