காவலர் பொது பள்ளியில் கல்வி அதிகாரிகள் ஆய்வு: வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை


மேலக்கோட்டையூர்: வண்டலூர் அருகே மேலக்கோட்டையூரில் செயல்படும் காவலர் பொதுப் பள்ளியை மேம்படுத்தி செயல்படுத்துவது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மேலக்கோட்டையூரில் 8 ஏக்கர் பரப்பளவில் காவலர் பொதுப் பள்ளி செயல்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளுக்கு நிகரான கட்டமைப்பு வசதி இந்த பள்ளியில் உள்ளது.

அதிகாரிகளுடன் ஆலோசனை: இந்நிலையில் நேற்று முன்தினம் உள்துறை செயலாளர் அமுதா, பள்ளிக் கல்வி துறை செயலாளர் ஜெ.குமரகுருபரன், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அ.அமல்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் காவலர் பொது பள்ளி கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பள்ளியை சிறப்பாக செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில் அரசு மாதிரிப் பள்ளிகளின் உறுப்பினர்-செயலர் இரா.சுதன், தொடக்க கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், பள்ளி கல்வி இயக்குநர் க.அறிவொளி ஆகியோர் நேற்று மேலக்கோட்டையூரில் உள்ள உண்டு உறைவிட காவலர் பொதுப் பள்ளி வாளகத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

மாணவர் சேர்க்கையை எவ்வாறு அதிகப்படுத்துவது, பள்ளியில் என்ன வசதிகள் உள்ளன, பள்ளிக்கு இன்னும் என்னென்ன தேவை என்பதை கேட்டறிந்தனர்.

இந்த ஆய்வின்போது செங்கல்பட்டு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அரவிந்தன், திருப்போரூர் வட்டார கல்வி அலுவலர் சிவசங்கரன், பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.குருநாதன், போலீஸ் குடியிருப்பு கட்டுமான பொறியாளர்கள் பலர் உடனிருந்தனர்.